பொது நிருவாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் இன்று (30) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தை மறுசீரமைத்து, கடன் ஒப்பந்த காலத்தை நீடிப்பதுடன் அதனை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக உள்ளூராட்சி அமைச்சின் நிகழ்ச்சித் திட்ட தேசிய பணிப்பாளர் பி. திசாநாயக்க தெளிவாக விபரித்ததுடன், உள்ளூராட்சி சபைகளுக்கான நிதி வழங்கலுக்கு ஊடாக 2023ஆம் ஆண்டில் திட்ட அமுலாக்கம் மற்றும் குறித்து கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் விளக்கமளித்தார்.
உலக வங்கியின் கடன் வசதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மானியங்களுடன் உள்ளூராட்சி அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வுதவித் திட்டத்திம் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் உவா மாகாணங்களின் 12 மாவட்டங்களிலும் உள்ள 134 உள்ளூராட்சி மன்றங்களும் உள்வாங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இத்திட்டம் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வளிக்கக் கூடிய சூரிய வலு, ஏற்றுமதி, இறக்குமதி மாற்றீடு, சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றின் அபிவிருத்திக்காக உலக வங்கியினால் வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய தொகையாக 36மில்லியன் ரூபா கொக்கட்டிச்சோலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவை பிரதேச மக்களின் பால் பொருட்கள் போன்ற உள்ளூர் உற்பத்திகளின் பெறுமதியை, இயந்திரங்கள் மூலம் அதிகரித்து, தேசிய மற்றும் சர்வதேச சந்தை வாய்ப்புக்களை அடைவதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்த தொகையாக 2.7மில்லியன் ரூபா வெல்லவேலி பிரதேச செயலகத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிதியூடாக பிரதேசத்தின் தும்பரங்கேணி பகுதியில் மக்களுக்கான குடிநீர் விநியோகத்தின் கீழ் குழாய் விநியோகத்தை அதிகரித்தல் மற்றும் அவர்களின் குடிநீர் பிரச்சினையை நிவர்த்தி செய்து ஆரோக்கியமான வாழ்க்கை ஏற்படுத்தப்படவுள்ளது.
இவை தவிர, மட்டக்களப்பு மாநகர சபைக்கு 4.5 மில்லியன் ரூபாவும், நகர சபைகளான ஏறாவூருக்கு 24.8 மில்லியன் மற்றும் காத்தான்குடிக்கு 14.1மில்லியன் ரூபாவும், பிரதேச சபைகளான கோறளைப்பற்று மேற்குக்கு (ஓட்டமாவடி) 21.6மில்லியன், கோறளைப்பற்றுக்கு (வாழைச்சேனை) 19.3 மில்லியன், ஏறாவூர் பற்றுக்கு (செங்கலடி) 12.7மில்லியன், மண்முனைக்கு (ஆரையம்பதி) 6.9 மில்லியன், மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்றுக்கு (களுதாவளை) 5.1 மில்லியன், மண்முனை மேற்குக்கு (வவுணதீவு) 9.8மில்லியன் ரூபாக்களும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, உதவிப் பணிப்பாளர் வி. நவநீதன், மாவட்ட உள்ளுராட்சி அபிவிருத்தி உதவித் திட்டப் பொறியிலாளர் ராஜகோபாலசிங்க, மாவட்டத்தின் 13 உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், அதன் உறுப்பினர்கள் மற்றும் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களின் செயலாளர்கள், மாவட்டத்தின் துறைசார் திணைக்களங்களின் பிரதானிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்