புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்தில் சிக்கிய தகவலை அறிந்து வேதனை அடைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதோடு அவர் விரைந்து குணம் பெற வேண்டும் என பிரதமர் மோடி பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி – டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் பயணித்தபோது சாலையில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே காலை 5.30 மணி அளவில் நடந்தது. கார் தீப்பற்றிய நிலையில், அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக அவரை காரில் இருந்து மீட்டுள்ளனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நெற்றி, முழங்கால், முதுகு, மணிக்கட்டு, கணுக்கால் போன்ற இடங்களில் காயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் அவர் விரைந்து குணம் பெற வேண்டி விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.
“கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்தில் சிக்கியது வேதனை அளிக்கிறது. அவர் ஆரோக்கியத்திற்காகவும், விரைந்து குணம் பெற வேண்டி பிரார்த்திக்கிறேன்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முன்னதாக, பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார். அவருக்கு இறுதி சடங்கு காலையில் நடந்தது.
Distressed by the accident of noted cricketer Rishabh Pant. I pray for his good health and well-being. @RishabhPant17
— Narendra Modi (@narendramodi) December 30, 2022