புதுச்சேரியில் ரெஸ்டோ பார் உரிமங்களை ரத்து செய்யக் கோரி விசிக வாகனப் பிரச்சாரம்: தடுத்து நிறுத்திய போலீஸார்

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய மதுபானக் கடைகள், ரெஸ்டோ பப் உரிமங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மேற்கொண்ட வாகனப் பரப்புரை பயணத்துக்கு அனுமதி மறுத்து போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உழவர்கரை, கருவடிக்குப்பம், முத்தியால்பேட்டை பகுதிகளில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகள், ரெஸ்டோ பப் ஆகியவற்றின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். முதல்வர் ரங்கசாமியின் புதிய மதுபானக்கடை, மதுபான ஆலைக்கான அனுமதியைத் திரும்பப்பெற வேண்டும் என வலியறுத்தியும், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக அரசைக் கண்டித்தும் வாகனப் பரப்புரைப் பயணம் இன்று மேற்கொள்ளப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பாவாணன் தலைமை தாங்கினார். அன்பரசன், தீந்தமிழகன், திருவரசன், ஆற்றலரசு, நேருழான் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தலித் நகர கூட்டமைப்பு, பெரியார் திராவிடர் கழகம் ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த வாகனப் பரப்புரைப் பயணம் இந்திரா காந்தி சிலை அருகே தொடங்கி உழர்கவரை பேருந்து நிறுத்தம், காந்தி நகர், ஜீவா காலனி செயின்பால்பேட் சந்திப்பு, கருவடிக்குப்பம், முத்தியால்பேட்டை மணிக்கூண்டு, காந்தி வீதி-நேரு வீதி சந்திப்பு சென்று அண்ணா சிலை அருகில் முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அதன்படி இந்திரா காந்தி சிலை அருகில் வாகனப் பரப்புரைப் பயணம் தொடங்கியது. அப்போது அங்கு வந்த போலீஸார் பரப்புரை பணத்துக்கு அனுமதி இல்லை என்று கூறி, தடுத்து நிறுத்தினர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீஸ் அனுமதி பெற்று பரப்புரை பயணத்தை மேற்கொண்டுள்ளோம். ஆகவே அனுமதிக்க வேண்டும் என்றனர். ஆனாலும் போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து வாகன பரப்புரை பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ளாமல், சீனியர் எஸ்பியை சந்தித்து முறையிட அங்கிருந்து ஊர்வலமாக சென்றனர்.

அங்கு சீனியர் எஸ்பி அலுவலகம் முன்பு அவர்கள் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு சென்றனர். இதனால் சிறிது பரபரப்பு நிலவியது. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கூறும்போது, ”வாகனப் பரப்புரைப் பயணத்துக்கு அனுமதி கேட்டு சீனியர் எஸ்பி அலுவலகத்தில் கடிதம் அளித்தோம். போலீஸார் அனுமதி அளித்த நிலையில், தற்போது திடீரென வாகனப் பரப்புரை பயணத்துக்கு அனுமதி இல்லை என்றும், புத்தாண்டுக்கு பிறகு மேற்கொள்ளும்படியும் கூறி தடுத்து நிறுத்தியுள்ளனர். இது ஜனநாயக விரோதம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.