கொடைக்கானல்: ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானலில் கோடை காலம் மட்டுமின்றி அனைத்து பருவ காலங்களிலும் அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் வருகை தருவதுண்டு. தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குடும்பம், குடும்பமாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். கொடைக்கானலில் டிசம்பர் மாதத்தில் வழக்கமாக உறைபனி சீசன் நிலவுவது வழக்கம். இதன்படி இம்மாத தொடக்கத்தில் சில நாட்கள் உறைபனி நிலவியது.
இதையடுத்து கடந்த பல தினங்களாக தொடர்மழையால் பனி சீசன் பின்தங்கியது. தற்போது கொடைக்கானலில் மீண்டும் உறைபனி சீசன் தொடங்கியுள்ளது. இதனால் கடும் பனி மற்றும் குளிர் காரணமாக கொடைக்கானல் ஏரி பகுதி முழுவதும் வெண்மேகம் போர்த்தியது போல் காட்சி தருகிறது. தற்போது நான்கு டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை நிலவி வருகிறது. என்னதான் கடுங்குளிர் நிலவினாலும், சுற்றுலாப்பயணிகள் விடுமுறை மற்றும் புத்தாண்டை கொண்டாடுவதற்காக கொடைக்கானலுக்கு குவிந்தவண்ணமிருக்கின்றனர். இந்த உறைபனி சீசன் ஜனவரி முழுவதும் தொடரலாம் என்று வானிலை ஆராய்ச்சி மையத்தினர் தெரிவித்துள்ளனர்.