புதிய நாடாளுமன்றம் திறப்பு எப்போது? இன்னும் எத்தனை நாள்கள் இருக்கு தெரியுமா?

பிரம்மாண்டமாக தயாராகி வரும் புதிய நாடாளுமன்றம் எப்போது திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியிலுள்ள ‘சென்ட்ரல் விஸ்டா’ பகுதியை மறுவடிவமைப்பு செய்யும் திட்டத்தின் கீழ் தற்போதைய நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகிலேயே புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டுமானப் பணிகளை பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

டாடா நிறுவனம் சாா்பில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. குஜராத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹெச்.சி.பி டிசைன் என்ற நிறுவனம் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை வடிவமைத்தது.

நான்கு தளங்களுடன் 64,500 சதுர மீ. பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் அதி நவீன வசதிகளுடன் தயாராகி வருகிறது. இப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால் வரும் பிப்ரவரி மாதத்தில் நிறைவு பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

திட்டமிட்டபடி பிப்ரவரி மாதத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் நிலையில் புதிய நாடாளுமன்ற வளாகத்துக்கான திறப்பு விழா மாா்ச் மாதம் நடைபெறும். எனவே, மாா்ச் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் தொடங்கி நடத்தப்படும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமா்வு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடத்தப்படும் என டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

வழக்கமாக பட்ஜெட் கூட்டத்தொடா் இரண்டு அமா்வுகளாக நடத்தப்படும். ஜனவரி 30 அல்லது 31ஆம் தேதியில் குடியரசுத் தலைவா் உரையுடன் முதல் அமா்வு தொடங்கப்படும்.

பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு பிப்ரவரி மாதம் 8 அல்லது 9ஆம் தேதிகளில் முதல் அமா்வு நிறைவு பெறும்.

ஒரு மாத இடைவெளிக்குப் பின் மாா்ச் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் தொடங்கப்படும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமா்வு ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் முடிவு பெறும்.

இந்த இரண்டாம் அமர்வு புதிய நாடாளுமன்றத்தில் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.