சண்டிகர்: பஞ்சாபில் ஜாதி குறியீடு கொண்ட 56 அரசுப் பள்ளிகளுக்கு அம்மாநில அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.
பஞ்சாபில் ஜாதி அடிப்படையில் பெயர் கொண்ட பள்ளிகளின் பெயரை மாற்றுமாறு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பைன்ஸ் கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டார்.
இதையடுத்து அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளும் தங்களின் அதிகாரவரம்புக்குட்பட்ட பகுதிகளில் இத்தகைய பெயர்கள் உள்ள பள்ளிகள் குறித்த அறிக்கையை அனுப்பி வைக்குமாறு பள்ளிக் கல்வித் துறை கேட்டுக்கொண்டது.
இதன் அடிப்படையில் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி உட்பட 56 அரசுப் பள்ளிகளின் பெயரை மாநில பள்ளிக் கல்வித் துறை மாற்றியுள்ளது.
பள்ளிகள் அமைந்துள்ள கிராமம் அல்லது நன்கு அறியப்பட்ட ஆளுமை, தியாகி அல்லது உள்ளூர் நாயகனின் பெயர் இந்தப் பள்ளிக்களுக்கு சூட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசின் இந்த நடவடிக்கைக்கு மாநில ஆம் ஆத்மி கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.