கரோனா பாதிப்பு தகவல்களை வெளியிட சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

ஜெனிவா: சீனாவில் நிலவும் கரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிடுமாறு உலக சுகாதார நிறுவனம் அந்நாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சீனாவில் நிலவும் கரோனா பாதிப்பு தொடர்பான உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம், சீனாவின் தேசிய சுகாதார ஆணையம், தேசிய தொற்று கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், சீனாவில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், கரோனா தொற்று பாதித்த பகுதிகள், கண்காணிப்புப் பணிகள், தடுப்பூசி, மருத்துவ சிகிச்சைகள், தொடர்பு வசதிகள் ஆகியவை குறித்து, சீன நிபுணர்கள், உலக சுகாதார அமைப்பிடம் விவரித்தனர்.

இவற்றைக் கேட்டுக்கொண்ட உலக சுகாதார அமைப்பு, கரோனா தொற்றில் மரபணுக்களின் பங்கு குறித்த தகவல்கள், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, தடுப்பூசி எத்தனை பேருக்கு போடப்பட்டுள்ளது, குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் எவ்வளவு பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் ஆகிய விவரங்களை அளிக்குமாறு சீன நிபுணர்களை வலியுறுத்தியது. எனினும், இந்த விவரங்களை அவர்கள் வழங்கவில்லை.

கோவிட் 19 விஷயத்தில் சீன நிபுணர்கள் மற்ற நிபுணர்களுடன் இன்னும் நெருங்கி வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள உலக சுகாதார அமைப்பு, வரும் ஜனவரி 3ம் தேதி நடைபெற உள்ள தொற்று நோய்களுக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூட்டத்தில், இந்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இத்தகைய தகவல்கள் சீனாவுக்கும் உலகிற்கும் மிகவும் முக்கியம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.