கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள டிரைவர் ஜமுனா படம் டிசம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கின்ஸ்லின் இந்த படத்தை இயக்க ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் ஆடுகளம் நரேன் மற்றும் சில புதுமுகங்கள் நடித்துள்ளனர். ஐஸ்வர்யா ராஜேஷ் தம்பி மணி இந்த படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் தந்தை கார் ஓட்டுவதாக உள்ளார். எதிர்பாராத விதமாக அவரது தந்தை இறந்துவிட குடும்ப சூழ்நிலை காரணமாக ஐஸ்வர்யா ராஜேஷ் டிரைவராக பணிபுரிகிறார். ஒரு ட்ரிப்பில் மூன்று பேர் இவரது காரில் ஏறுகின்றனர், பின்பு தான் அவர்கள் கூலிப்படை என்பது ஐஸ்வர்யா ராஜேஷிற்கு தெரிய வருகிறது. பின்பு என்ன ஆனது என்பதே டிரைவர் ஜமுனாவின் கதை. பெரிதாக எந்தவித மேக்கப்பும் இல்லாமல் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒரு மிடில் கிளாஸ் பொண்ணாக அந்த கதாபாத்திரமாகவே அசத்தியுள்ளார். முதல் பாதி முழுக்கவே அனைத்திற்கும் பயப்படும் ஒரு பெண்ணாக அசத்தியுள்ளார். அரசியல்வாதியாக வழக்கம்போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் ஆடுகளம் நரேன்.
அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பு படம் ஆரம்பித்ததில் இருந்து ஏற்படுகிறது. எந்தவித தேவையில்லாத காட்சிகளும் இல்லாமல் ஒரு சூப்பரான திரில்லரை கொடுத்துள்ளார் இயக்குனர் கின்ஸ்லின். ஜிப்ரானின் இசையில் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது. நிறைய காட்சிகள் ஒரு காருக்குள் நடப்பது போல் இருந்த போதிலும் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இரண்டாம் பாதியில் வரும் ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்தது, அதுவே இந்த படத்திற்கான வெற்றி.