போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பது அரசியல் அல்ல – ஆந்திர முதல்வர் அனல் பேச்சு

ஆந்திர மாநிலம் ஜோகினத்துணிபாலம் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கலந்துகொண்டு உரையாற்றியது பேசுபொருளாகியுள்ளது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது அனல் பறக்க குற்றசாட்டுகளை அவர் வைத்தார். சந்திரபாபு நாயுடுவின் விளம்பர வெறிக்கு மனித உயிர்களை அவர் பலி கொடுத்து விட்டதாக ஜெகன் மோகன் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஜெகன் மோகன் ரெட்டி கூறியது; ஒரு நல்ல அரசியல் என்பது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் நலத்திட்டங்களை செயல்படுத்துவதே தவிர சினிமா ஷூட்டிங் போல ஷோ காட்டுவது, விளம்பரப்படுத்துவது, கேமராக்களுக்கு போஸ் கொடுப்பது கிடையாது. கடந்த முறை ஆட்சியில் இருந்த தெலுங்கு தேச கட்சி மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யாமல் மாறாக பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு இல்லாதவர்களை ஏமாற்றிவிட்டது.

தேர்தல் அறிக்கைகளில் கொடுக்கப்பட்டுள்ள உறுதிமொழிகளை கடைபிடிப்பதில்தான் அரசியல் சீராக ஓடிக்கொண்டிருக்கிறது. சமச்சீரான பிராந்திய வளர்ச்சிக்கும் அது உதவுகிறது. ஒவ்வொரு புதுமையான திட்டங்களுடன் பொருளாதாரம் உயர்ந்து கிராமப்புற நிலப்பரப்பை மாற்றுகிறதே தவிர சினிமா படப்பிடிப்பு, நடிப்பு, நாடகம் அல்ல.

எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, அவரது வளர்ப்பு மகன் பவன் கல்யாண் மற்றும் ஊடகங்கள் அடங்கிய கும்பலால் கட்டுப்படுத்தப்பட்டு, சீரழிந்த அரசியல் அமைப்புடன் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி போரை நடத்தி வருகிறது.

சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் ஏமாற்றிய தெலுங்கு தேச கட்சி போலல்லாமல், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி தான் சொல்வதை மட்டுமே செய்யும், என்ன செய்ய முடியும் என்பதையும் சொல்லும். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு வாக்குறுதியையும் அரசாங்கம் நிறைவேற்றி, உறுதியான தலைவரைப் பெற்றதற்காக அனைவரையும் பெருமைப்பட வைக்கும்” என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.

மேலும், சந்திரபாபு நாயுடுவை நினைக்கும் போது, முதுகில் குத்துவது, ஏமாற்றுவது என்ற இரண்டு விஷயங்கள்தான் நம் நினைவுக்கு வரும். 14 ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வந்து, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத வளர்ப்பு மகன் பவன் கல்யாணை கிளியை போல சந்திரபாபு நாய்டு தனது தோளில் சுமந்துகொண்டு கட்டுக்கதைகளை கட்டி வருகிறார்.

முந்தைய அரசில் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை 39 லட்சமாக இருந்த நிலையில், தற்போது 62.30 லட்சமாக உயர்ந்துள்ளது. ஆனால், சில மஞ்சள் ஊடகங்கள் அதுகுறித்து பேசாமல் சந்திரபாபு நாயுடுவை மீண்டும் தங்களது சுயநலத்துக்காக அதிகாரத்துக்கு கொண்டு வர கேலிக்கூத்துகளை பரப்புகின்றன என்றும், தெலுங்கு தேசம் கட்சி கொள்ளையடிக்கும் கொள்கையை மட்டுமே கடைப்பிடித்தது என்றும் முதல்வர் கூறினார்.

ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த பேச்சு அம்மாநில எதிர்கட்சி தலைவருக்கு மட்டுமல்லாமல் பிரதமர் முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரைக்கும் பொருந்தும் என்று, முதல்வர் ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் போட்டோ எடுக்கப்படும் நிகழ்வினை ஒப்பிட்டு விமர்சிக்க தொடங்கியுள்ளனர் நெட்டிசன்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.