பேனா வைக்க நிதி இருக்கு ஊதியம் கொடுக்க நிதி இல்லையா?… டிடிவி தினகரன் கேள்வி

சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நினைவு வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஊதிய உயர்வு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 3000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களில் 160 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதுவரை சரிவர உணவு உட்கொள்ளாததால் வாந்தி மயக்கம் என பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் அதேபோல் இன்று காலையிலிருந்து 15க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்து முதலுதவி செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை கேட்பதற்காக அமமுக கட்சியின் பொதுச்செயலாளர், டிடிவி தினகரன்  வருகை தந்திருந்தார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் விவரங்களை கேட்டு அறிந்து அவர்களுக்கு நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “ இந்த அளவிற்கு இந்த போராட்டத்தை விட்டு இருக்கக்கூடாது.எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு வாக்குறிதியை கொடுத்துவிட்டு தற்போது அதை கண்டு கொள்ளாமல் இருப்பது நல்லது இல்லை. தேர்தல் வாக்குறுதியிலும் இவர்களின் கோரிக்கை சரியானது என்று சொல்லி கொடுத்து விட்டு தற்போது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்

இவர்கள் பெரிய கோரிக்கைகள் எதுவும் வைக்கவில்லையே. நியமாக கோரிக்கை வைக்கிறார்கள் அதை நிறைவேற்றி கொடுக்க வேண்டும். மக்களை ஏமாற்றுவதுதான் அரசின் கொள்கையாக இருந்தால் மக்களுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடும். இப்படி கண்டுகொள்ளாமல் இருக்கும் இந்த ஆட்சியை திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

கடலில் பேனா வைப்பதற்கு நிதி எங்கு இருந்து வந்தது ஆசிரியர்களுக்கு வழங்குவதில் நிதி பற்றாக்குறை இருப்பதாக கூறுவதை கேட்கும்போது கேவலமாக இருக்கிறது. 

செய்யும் வேலைக்கு ஊதியம்தான் அவர்கள் கேட்கிறார்கள் இதை அரசு செய்யவில்லை என்றால் அடுத்த கட்டமாக நான் மட்டுமின்றி அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து போராடக்கூடிய நிலை வந்துவிடும்.

முதலமைச்சருக்கு அவரின் மகனின் படத்தை பார்பதற்கோ அல்லது விளம்பரத்தில் நடிப்பதற்குத்தான் நேரம் இருக்கிறது. இந்த நேரத்தில் இவர்களுடன்  பேசுவதற்கு நேரம் எங்கு இருக்கப்போகிறது,  அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும்” என்றார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.