"ஷர்மிகா சரண் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!"- இந்திய மருத்துவ இணை இயக்குநர் பார்த்திபன் எச்சரிக்கை

பரபரப்பை உண்டாக்கிய பா.ஜ.க-வின் டெய்சி சரண் ஆடியோ பேச்சைவிட, தற்போது அவரது மகள் டாக்டர் ஷர்மிகா சரண் பேசும் வீடியோக்கள்தான் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி சர்ச்சையை உண்டாக்கிக்கொண்டிருக்கின்றன.

”கவுந்து படுத்தா மார்பக புற்றுநோய் வரும்.”

”தினமும் 4 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும்.”

”ஒரு க்ளோப் ஜாமுன் சாப்பிட்டா, ஒரேநாளில் மூணு கிலோ எடை கூடிவிடும்.”

”நம்மவிட பெரிய மிருகத்தை சாப்பிட்டா நம்மளால டைஜஸ்ட் (செரிமானம்) பண்ணமுடியாது. பீஃப் நம்மவிட பெரிய மிருகம்ங்குறதால அதைச் சாப்பிடக்கூடாது.”

– இப்படிச் சித்த மருத்துவர் என்கிற பெயரில் டெய்சி சரணின் மகள் ஷர்மிகா மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரான தவறான கருத்துகளை சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசின் ‘இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை’யின் இணை இயக்குநர் டாக்டர் பார்த்திபனை சந்தித்துப் பேசினோம்.

டாக்டர் பார்த்திபன்

“ஷர்மிகா ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவராக, சமூக ஊடகங்களில் கருத்துகள் சொல்வதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால், மருத்துவ விதிகள் மற்றும் நெறிமுறைகளுக்கு எதிரான, தவறான கருத்துகளைப் பேசவும் கூடாது, பரப்பவும் கூடாது. அதுவும், சித்த மருத்துவத்தில் மாட்டுக்கறி என்றில்லை, எந்த இறைச்சியையும் சாப்பிடக்கூடாது என்று குறிப்பிடப்படவில்லை. யார் யாருக்கு என்ன சத்தான உணவு தேவைப்படுகிறதோ, அதற்கேற்றாற்போல அசைவமோ, சைவமோ சாப்பிடலாம். மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்பது தவறான கருத்து. இவர்கள் சொல்வதற்கு மருத்துவ ரீதியாக எந்தவிதமான ஆதாரமும் கிடையாது. தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்வதற்கான ஒரு நிகழ்வாகத்தான் இதனைப் பார்க்கிறேன். ‘மருத்துவத்துக்கு அப்பாற்பட்டு நான் செஞக்சுப் பார்த்தேன்’ என்று ஒரு மருத்துவர் கூறுவது ஏற்புடையது அல்ல.

அதேபோல், ஷர்மிகா சொல்வதுபோல ஒரே குலோப் ஜாமில் மூன்று கிலோ எடை ஒரேநாளில் கூடுவது என்பதற்கு வாய்ப்பே இல்லை. ஒருநாளில் மூன்று வேளைக்குப் பதில் ஆறு வேளை எனச் சாப்பாடு சாப்பிட்டால்கூட மூன்று கிலோ எடை கூடாது. மேலும், குப்புறப்படுத்தால் மார்பகப் புற்றுநோய் வரும் என்கிறார். இதற்கு, மருத்துவ ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. மருத்துவ நிபுணர்களின் ஆராய்ச்சிக்குட்பட்ட தகவல்களை மட்டும்தான் ஏற்றுக்கொள்ளமுடியும். தானே, கருத்துகளை மக்களிடம் திணிக்கக்கூடாது. ஒரு மருத்துவர் மருத்துவரீதியான கருத்துகளை மட்டும்தான் சொல்லவேண்டும். மருத்துவத்துக்கு அப்பாற்பட்டு இப்படியெல்லாம் சொல்லக்கூடாது” என்றவரிடம்,

“சித்த மருத்துவர்கள் அதிகமாகக் கைது செய்யப்படுவதால், சித்த மருத்துவத்தைப் பிரபலமாக்க நான் பேசிக்கொண்டிருக்கிறேன்” என்று ஷர்மிகா கூறுகிறாரே? என்று நாம் கேட்டபோது,

சித்த மருத்துவர் ஷர்மிகா சரண்

“எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய அலோபதி மருத்துவப்படிப்புகளுக்கு தனி கவுன்சில்கள் உள்ளன. அதாவது, எம்.பி.பி.எஸ் படித்தவர்கள் சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் (Tamilnadu Medical Council) பதிவு செய்வார்கள். அதேபோல், பி.டி.எஸ் பல் மருத்துவம் படித்தவர்கள் சென்னை கோயம்பேட்டிலுள்ள தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சிலில் (Tamil Nadu Dental Council) பதிவு செய்வார்கள்.

அப்படித்தான் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மருத்துவமான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, யோகா அண்ட் நேச்சுரோபதி ஆகிய ஐந்தரை வருடப் பட்டப்படிப்பை முடித்தவர்கள் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா மருத்துவனை வளாகத்திலுள்ள சித்த மருத்துவ கவுன்சில், தமிழ்நாடு இந்திய மருத்துவக் கவுன்சில் (Tamilnadu Board of Indian Medicine), ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் ஆகியவற்றில் பதிவு செய்யவேண்டும். அப்படிப் பதிவு செய்யப்படாதவர்கள் மருத்துவச் சிகிச்சை அளிக்கக்கூடாது. அதேபோல், இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த பரம்பரை வைத்தியர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்கமுடியும். முறையாகச் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, யோகா அண்ட் நேச்சுரோபதி படித்த மருத்துவர்கள் யாரும் கைது செய்யப்படுவதில்லை.

மேற்கண்ட எந்தப் படிப்பும் படிக்காமல், கவுன்சிலில் பதிவும் செய்யாமல் பரம்பரை மருத்துவர்கள் என்று கூறிக்கொண்டு சிகிச்சை அளிக்கிறவர்கள்தான் கைது செய்யப்படுகிறார்கள். ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஹீலர் பாஸ்கர், திருத்தணிகாசலம் போன்றவர்கள் பதிவு பெற்ற மருத்துவர்கள் அல்ல” என்றவரிடம்,

“இப்படி மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரான, மக்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் தகவல்களைப் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்ற நமது கேள்விக்கு,

ஷர்மிகா சரண், டெய்சி சரண்

“மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராகத் தவறான கருத்துகளைப் பேசும் ஷர்மிகா குறித்து, பொதுமக்கள் யாராவது ஒருவர் புகார் அளித்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற, தவறான தகவல்களை நம்பி சுய மருத்துவம் செய்துகொள்வது கூடாது. அருகிலுள்ள அரசு மருத்துவர்களை நாடவேண்டும். தமிழகத்தில் 1541 இந்திய மருத்துவ மையங்கள் உள்ளன. அங்குச் சென்று இலவசமான ஆலோசனைகளையும் முறையான சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ளலாம்” என்கிறார் விழிப்புணர்வூட்டும் விதமாக.

இதுகுறித்து, சர்ச்சைக்குள்ளான டாக்டர் ஷர்மிகாவை தொடர்புகொண்டு நாம் பேசியபோது, இது தொடர்பாகப் பேச மறுத்துவிட்டார். செய்தி வெளியான பிறகு அவர் விளக்கம் அளித்தால் அதைப் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறது விகடன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.