Pudukottai Student in China : புதுக்கோட்டை மாவட்டம் போஸ்நகர் 12ஆவது வீதியில் வசித்து வரும் சையது அபுல் ஹசன். இவரின் மகன் ஷேக் அப்துல்லா (22), சீனாவில் கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவம் பயின்று வந்தார். அவரின் மருத்துவப்படிப்பு நிறைவு பெறும் தருவாயில் இருந்த சூழலில், அங்கு மருத்துவ பல்கலைக்கழகம் ஒன்றில், மருத்துவப் பயிற்சியும் பெற்று வந்தார். சமீபத்தில், தமிழ்நாடு வந்த அவர், கடந்த டிசம்பர் 11ஆம் தேதி அன்று சீனா திரும்பினார்.
சீனாவில் கொரோனா உச்சத்தில் இருப்பதனால், வெளிநாடுகளில் இருந்து சீனா வரும் பயணிகளுக்கு எட்டு நாள்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், அப்துல் ஷேக்கும் எட்டு நாள்கள் தனிமைப்படுத்துதலுக்கு பின், வடகிழக்கு சீனாவில் உள்ள ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள கிகிஹார் (Qiqihar) மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளார்.
சீனா சென்றவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதில் கல்லீரல் பாதிப்படைந்து, மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் கடந்த ஒரு வார காலமாக சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவனின் பெயரில் 5 லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் செய்யபட்டு இருக்கும் நிலையில் மருத்துவ செலவு என்ற பெயரில் 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறபட்டு தொடர்ந்து சிகிச்சையில் இருந்துள்ளார்.
பின்னர், 20 லட்சம் ரூபாய் சிகிச்சைக்காக கேட்கப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களாக மாணவனின் உடல்நிலை குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் மனம் உடைந்த பெற்றோர் மாணவனின் உடல்நிலை குறித்து அறிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், முதலமைச்சர் தனி பிரிவு, இந்திய வெளியுறவுத் துறை என அனைத்து இடங்களுக்கும் மனு அளித்தும் மாணவனின் உடல்நிலையை அறிந்துகொள்ள இயலாமல் இருந்தது.
மருத்துவ மாணவர் ஷேக் கடைசியாக பேசிய வீடியோ ஒன்று குடும்பத்தார் தரப்பில் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்பிரச்னையை தமிழ்நாடு முதலமைச்சரின் பார்வைக்கு எடுத்து சென்று இந்த மருத்துவ மாணவரை மீட்க உதவிடுமாறு மாணவரின் குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவ மாணவர் ஷேக் அப்துல்லா சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.