Supreme Court on Demonetization : 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 1000 ரூபாய், 500 ரூபாய் தாள்களை செல்லாது என அறிவித்தது. கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கவும், கருப்பு பண பதுக்கலை வெளிக்கொண்டு வந்து பொருளாதாரத்தை சீராக்கும் முயற்சியில் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளரப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து சுமார் 58 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பழைய 1000 ரூபாய், 500 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவித்ததன் மூலம், ஒரே இரவில் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக இந்த மனுக்கள் குற்றஞ்சாட்டினர்.
இரு தரப்பு வாதம்
மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளும், முடிவுகளும் அரசால் எடுக்கப்படக்கூடாது என்றும், இதனை நீதிமன்றம் ரத்த செய்ய வேண்டும் எனவும் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்தனர்.
மத்திய அரசு தரப்பில்,”உறுதியான நிவாரணம் வழங்க முடியாத ஒரு விஷயத்தை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. இது ‘கடந்த காலத்திற்கு திரும்பிச் செல்வது போன்றது’ அல்லது ‘உடைத்து போட்ட முட்டையை மீண்டும் பழையபடி கொண்டுவருவதை போன்றது’. பணமதிப்பு நீக்கம் என்பது நன்கு பரிசீலிக்கப்பட்ட முடிவு. கள்ள நோட்டுகள், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், கருப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு மிகப்பெரிய வியூகத்தின் ஒரு பகுதி” என எதிர்வாதம் வைக்கப்பட்டது.
4 : 1 தீர்ப்பு
இதையடுத்து, பணமதிப்பிழப்பிற்கு எதிராக வந்த அத்தனை மனுக்களையும் ஒருங்கிணைத்து உச்ச நீதிமன்றம் ஒரே வழக்காக விசாரித்தது. அதனை நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது. இந்த அமர்வு குளிர்கால விடுமுறைக்கு முன் வாதங்களை கேட்டது. நீதிபதிகள் பி.ஆர்.கவை, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன், பி.வி. நாகரத்னா ஆகியோர் அமர்வின் மற்ற உறுப்பினர்களாவர்.
SC upholds Union Government’s 2016 demonetisation decision
Read @ANI Story | https://t.co/TQaPPdiuor#Demonetisation #SupremeCourt #Currency pic.twitter.com/qMn44XoB8J
— ANI Digital (@ani_digital) January 2, 2023
இந்நிலையில், இந்த அமர்வு இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கியது. இதில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என அமர்வின் நான்கு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். நீதிபதி பி.வி. நாகரத்னா மட்டும் மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தார். “ஒரே அரசாணை மூலம் 1000, 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்தது தவறு. இத்தகைய தீவிர நடவடிக்கையில் நாடாளுமன்றத்தை நாடாமல், அதனை ஒதுக்கி வைக்க முடியாது” என்றார்.