துப்பாக்கியால் சுட்டு புத்தாண்டை வரவேற்ற தொழிலதிபர் – அடுத்தடுத்து நிகழ்ந்த பரிதாபம்

புத்தாண்டை வரவேற்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது தவறுதலாக குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு துப்பாக்கி சுட்ட தொழிலதிபர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயரிழந்தார்.
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் பி.எச்.சாலை வித்யாநகர் பகுதியில் வசித்து வந்தவர் மஞ்சுநாத் ஹோலிகர். இவர் அப்பகுதியில் கண்ணாடி விற்பனை கடை வைத்து நடத்தி வருவதோடு மேலும் பல தொழில்களையும் செய்து வருகிறார்.
இவர் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை தனது வீட்டின் 3-வது மாடியில் உள்ள கண்ணாடி மாளிகையில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் தன்னிடம் உள்ள துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒருமுறை சுடுவாராம். இதையடுத்து அங்கு குவிந்த அனைவரும் ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்பார்களாம்.
அதுபோல் நேற்று முன்தினம் இரவும் இவரது வீட்டின் மாடியில் உள்ள கண்ணாடி மாளிகையில் புத்தாண்டை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து நள்ளிரவில் மஞ்சுநாத் ஹோலிகர், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் என அனைவரும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், மஞ்சுநாத் ஹோலிகருடைய மகன் சந்தீப்பின் நண்பன் வினய் (34) என்பவரும் கலந்து கொண்டார். புத்தாண்டு பிறந்தவுடன் மஞ்சுநாத் ஹோலிகர் புத்தாண்டை வரவேற்கும் வகையில் வழக்கம்போல் தனது நாட்டு துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டுள்ளார்.
image
அப்போது எதிர்பாராத விதமாக தவறுதலாக துப்பாக்கி குண்டு சந்தீப்பின் நண்பன் வினயின் வயிற்றில் பாய்ந்துள்ளது. இதில் அவர் சுருண்டு விழுந்தார். இதைப்பார்த்த அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சிடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவமொக்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து இச்சம்பவத்திற்கு தன்னுடைய செயல்தான் காரணம் என்று நினைத்த மஞ்சுநாத் ஹோலிகர் மனமுடைந்து இருந்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் கண்ணாடி மாளிகையிலேயே மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், மஞ்சுநாத் ஹோலிகரை மீட்டனர். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனால் புத்தாண்டை கொண்டாட திரண்ட அனைவரும் சோகத்தில் மூழ்கினர். அந்த வீடே துக்க வீடாக மாறியது. இச்சம்பவம் குறித்து கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.