சுபஸ்ரீ மர்ம மரணம்… திகிலூட்டும் ஈஷா மைய சம்பவம்… கொடிபிடிச்சு இறங்கிய கோவை!

கோவை ஈஷா யோக மையத்தில் பயிற்சி பெறுவதற்காக சென்ற சுபஸ்ரீ (34) என்ற பெண் மர்மமான உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மர்ம மரணம்

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் கட்சியை சேர்ந்த கோவை மக்களவை தொகுதி எம்.பி பி.ஆர்.நடராஜன், சுபஸ்ரீயை 18ஆம் தேதியில் இருந்து காணவில்லை. சிசிடிவி காட்சிகளை பார்க்கும் போது யோகா உடையுடன் வெளியே ஓடுவது தெரியவருகிறது. ஒருவார காலமாக பயிற்சியில் இருந்தவருக்கு கடைசி நாளில் என்ன பிரச்சினை? நேற்றைய தினம் சடலமாக கிணற்றில் இருந்து மீட்கப்பட்டார்.

எரியூட்டப்பட்ட உடல்

அவரது உடல் அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சுபஸ்ரீயின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவரது குடும்ப வழக்கத்திற்கு மாறாக எரியூட்டப்பட்டிருக்கிறது. இது கோவை மாவட்ட மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈஷாவில் இப்படிப்பட்ட மர்ம மரணங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

தமிழக அரசுக்கு கோரிக்கை

அந்த பெண்ணை துரத்தியது யார்? அந்த பெண் ஓட வேண்டிய அவசியம் என்ன? எனவே ஈஷாவை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். சுபஸ்ரீவின் மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு உடனடியாக ஒரு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். இத்தகைய நிகழ்வு தொடர்வதை கோவை மக்கள் பீதியுடன் பார்த்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் ஈஷா யோகா மையத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகை புரிந்து தங்கினார்.

சட்டத்தை மதிக்கவில்லை என புகார்

தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், தேசிய தலைவர்கள் என பலரும் வருகை புரிவதால் தங்களை கேள்வி கேட்க முடியாது. ஒன்றும் செய்துவிட முடியாது என்று நினைக்கின்றனர். எனவே மாநில அரசும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் தலையிட்டு ஒரு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் பேசுகையில், கோவை ஈஷாவில் தமிழகத்தின் சட்ட திட்டங்களை மதிக்கிறார்களா? இந்திய நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்கிறார்களா?

ஆதரவாக நிற்கும் அரசு தரப்பு

லட்சக்கணக்கான ஏக்கரில் கட்டிடங்களை கட்டி வைத்துள்ளனர். இதை பற்றி மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் அவர்கள், நீதிமன்றத்தில் வந்து சொல்கிறார். அவர்கள் கல்விக் கூடங்களாக கட்டியுள்ளனர். எனவே அனுமதி வாங்கி கட்ட வேண்டிய அவசியம் இல்லை என அரசே ஆதரவாக பதில் அளிக்கின்றனர். இதன்மூலம் எவ்வளவு தூரத்திற்கு அவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர் எனத் தெரிய வருவதாக குறிப்பிட்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.