25 ஆண்டுகளை நிறைவு செய்த பிஜு ஜனதா தளம் – அசைக்க முடியாத இடத்தில் நவீன் பட்நாயக்

கட்சி தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளில் இதுவரை ஒரு தேர்தல் தோல்வியைக் கூட சந்திக்காத மாநில கட்சியாக பிஜு ஜனதா தளம் திகழ்கிறது.  

நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சிதான் இப்போது ஒடிஸா மாநிலத்தில் ஆட்சியில் உள்ளது. 1997ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அந்தக் கட்சி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

ஆரம்பத்தில் பாஜகவுடன் சேர்ந்துதான் தேர்தலில் போட்டியிட்டார். நவீன் பட்நாயக். மத்தியிலும் பாஜகவுக்கு ஆதரவாகவே அவர் இருந்துவந்தார். இச்சூழலில் 1997இல் பாஜக உடன் ஜனதா தளம் கூட்டணி வைக்காததால் அதிருப்தியடைந்த நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளம் என்ற பெயரில் தனிக் கட்சியை தொடங்கினார். இதன் தேர்தல் சின்னம் சங்கு. 2000 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒடிசா சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி வைத்து பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன்பின் மாநில பாஜக தலைவர்கள் நவீன் பட்நாயக்கை ஓரங்கட்டிவிட்டு ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிட்டனர். சுதாகரித்துக்கொண்ட நவீன் பட்நாயக் பாஜக உடனான தொடர்பை துண்டிக்க முடிவு செய்தார். 2009, 2014ஆம் ஆண்டுகளில் பா.ஜ.க கூட்டணியிலிருந்து பிரிந்து தனியாகவே பெரும்பான்மை பெற்றது பிஜேடி.

image
2019 சட்டப்பேரவை தேர்தலிலும் பிஜு ஜனதா தளம் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டதைத் தொடர்ந்து நவீன் பட்நாயக் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒடிசா மாநில முதலமைச்சராக பதவியேற்றார்.  முதலமைச்சராகத் தொடர்ந்து 22 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துவிட்டார் நவீன் பட்நாயக்.  கட்சி தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளில் இதுவரை ஒரு சட்டப்பேரவை தேர்தல் தோல்வியைக் கூட சந்திக்காத ஒரு மாநில கட்சி என்றால் அது பிஜு ஜனதா தளம் மட்டுமே.

அடுத்து ஆண்டு (2024) ஒடிசாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஏராளமான நலத்திட்டங்களுக்கும் மகளிர் சுயவேலைவாய்ப்பு குழுக்களுக்கும் ஏகப்பட்ட நிதி ஒதுக்கியிருக்கிறார் நவீன். அடுத்த வெற்றிகளுக்கும் தயாராகிவருகிறது பிஜேடி.

தொடர்ச்சியாக 22 ஆண்டுகாலமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்துவரும் பிஜூ ஜனதா தளம் மீது ஒடிசா மக்களுக்குப் பெரியளவில் அதிருப்தி இல்லை. ஊழலற்றவராகவும், அரசியல் கறை படியாதவராகவும் , வெளிப்படையான ஆட்சியாளராகவும் நவீன் பட்நாயக் திகழ்ந்து வருகிறார். நவீன் மீது எந்தவொரு அழுத்தமான குற்றச்சாட்டையும் எதிர்க்கட்சிகளால் சுமத்த முடியவில்லை. ஒடிசா மக்கள் அவரை நல்லாட்சி தருபவராகவே கருதி வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் ஒடிசாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவது அதற்கொரு உதாரணம். ஒடிசா மக்களுக்கு பிஜூ ஜனதா தளத்தின் மீதிருந்த நம்பிக்கை சற்றும் குறையவில்லை என்பதே களநிலவரமாக இருக்கிறது.

image
ஜனவரி மாதம் ரூர்கேலாவில் நடைபெறும் ஹாக்கி உலகக் கோப்பையின் தொடக்க நிகழ்ச்சிக்கு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பாஜக அல்லாத அனைத்து எதிர்க்கட்சி முதல்வர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும் கலந்து கொள்கின்றனர். இதன் மூலமாக பிஜூ ஜனதா தளத்துக்கும், காங்கிரஸுக்கும் இடையே இணக்கமான உறவு உருவாகும் எனத் தெரிகிறது.  

மேலும் தற்போது ஒடிசாவில் காலூன்ற பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பிஜூ ஜனதா தளத்தின் தீவிரமான போட்டியாளராகவும் பாஜக மாறியுள்ளது. இதனால் பிஜூ ஜனதா தளம் காங்கிரஸுடன் நெருக்கம் காட்ட முயற்சிக்கிறது. ஒரு காலத்தில் பாஜகவின் பழமையான கூட்டாளியாகவும், காங்கிரஸின் முக்கிய எதிரியாகவும் இருந்த சிவசேனா, 2019-ல் காங்கிரஸ் உடன் இணைந்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியை அமைத்தது. அதே பாணியில் ஒடிசாவிலும் பிஜேடி-காங்கிரஸ் கூட்டணி அமையலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.