நரிக்குறவர் இன மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறதா கல்வி…? – தஞ்சையில் துயரம்

Thanjavur Tribal Students school dropouts : தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு சமீபத்தில் நடைபெற்றது. ஐந்து துறை அதிகாரிகள் தலைமையில் 15 ப்ளாக்கில் இந்த ஆய்வு நடைபெற்றது. 

இதில், தஞ்சை மாவட்டம் முழுவதும் சுமார் 1500 குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என முதற்கட்ட தகவல் தெரிய வந்துள்ளது. இதில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா மேல உள்ளூரில் உள்ள நரிகுறவர் பகுதியில் மட்டும் சுமார் 150 பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்து நரிக்குறவர் பெற்றோர்கள் கூறுகையில், தங்கள் பகுதியில் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வந்ததாகவும், தற்போது அது மூடப்பட்டுள்ளதால்தான், எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என்றனர்.

மேலும், இங்கிருந்து பள்ளிகூடம் சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனால், தாங்கள் காலையில் 6 மணிக்கே வேலைக்கு சென்று விடுவதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை என்றும் கூறுகின்றனர். 

பள்ளி செல்லும் வழியில் ஆறு, இரண்டு குளம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்டவை உள்ளதால் பயந்து கொண்டு பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்பவில்லை என தெரிகிறது. தங்கள் பகுதியில் பள்ளிகளை திறந்தால் அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்புவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 

தினமும் விளைநிலத்தில் எலி பிடிப்பது, ஊசி மணி விற்பது போன்ற அன்றாட கூலி வேலை தான் வேலை செல்கிறோம். எனவே தங்களுடைய குழந்தைகளை காலையில் 9:00 மணி வரை வீட்டில் இருந்து அவர்களை கிளப்பி பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலையில் உள்ளதாகவும், அருகில் பள்ளி இருந்தால் மாணவ மாணவிகளே தானாக கிளம்பி பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்படும் என்றும் கூறுகின்றனர். எனவே அரசு இப்பகுதியில் பள்ளிக்கூடம் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.