சினிமா முதல் அரசியல் வரை..! ராகுல் காந்தி – கமல்ஹாசன் பேசியது என்ன?

சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் விவாதித்து உள்ளனர்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை எனப்படும் இந்திய ஒற்றுமைப் பயணத்தை நடத்தி வருகிறார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணம், காஷ்மீரில் முடிவடைய உள்ளது. தற்போது இந்தப் பயணம் தலைநகர் டெல்லிக்குள் நுழைந்துள்ளது. இந்தப் பயணத்தில், ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்ற நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி டெல்லியில் கலந்து கொண்டார்.

இதற்கிடையே, ராகுல் காந்தி – கமல்ஹாசன் ஆகியோர் உரையாடி உள்ளனர். இந்த வீடியோவை, தனது யூ-டியூப் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்டு உள்ளார். அதில், சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடி உள்ளனர்.

உரையாடலில் ராகுல் காந்தி பேசியதாவது:

தேர்தல்களை மனதில் வைத்து நான் அரசியல் செய்வதில்லை என பலர் கூறுகிறார்கள். தேர்தல்களை இன்னும் சிரத்தையுடன் கையாள வேண்டும் என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். இளைஞர்கள், பெருவாரியான மக்கள் தொகை, மேற்கத்திய நாடுகளில் தேவைக்கதிகமான வளம் உள்ளது.

நாம் சீனாவைப் போல வருவதற்கு நமக்கு மிகப்பெரிய வாய்ப்பிருக்கிறது. அதே சமயம், அரசியலில் இன்னொரு வேலையும் இருக்கிறது. மக்களை ஒன்றிணைக்க வேண்டும். மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும். மக்களிடம் அன்பு செலுத்த வேண்டும்; அது முக்கியமான வேலை என கருதுகிறேன். உலகின் முன்னணி உற்பத்தியாளராக நம்மால் மாற முடியும்.

மேற்கத்திய நாடுகளிடம் தலைச்சிறந்த உற்பத்தி நிலையங்கள் உள்ளன. தொழில்நுட்பத்தில் அவர்கள் சிறந்து விளங்குகின்றனர். அவர்களால் பெரிய அளவிலான உற்பத்தியில் சீனாவுடன் போட்டி போட முடியாது. இது தான் பரிதாபத்திற்குரிய நிலை. நாம் தெருக்களில் நடக்கும் போது பார்க்கிறோம். நமது குழந்தைகள்

வேலை வாய்ப்பின்றி இருக்கின்றனர். ஆனால் நமது விவசாயத்தில் பெரும் வேலைவாய்ப்பு வசதிகள் உள்ளது.

தமிழக மக்கள் காட்டும் அன்பு என்னை நெகிழ்ச்சியடைய வைக்கிறது ; அவர்கள் காட்டும் அன்பும் பாசமும் மற்ற மாநில மக்களை தாண்டி என் நெஞ்சில் நிலைத்திருக்கிறது. தமிழர்கள் அன்பு காட்டும் விதம் உண்மையிலேயே வித்தியாசமானது. நமது முதல்வர்களையும், தலைவர்களையும் எடுத்து கொண்டால், பல ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்கின்றனர். நினைத்ததை செய்ய நினைக்கின்றனர். மக்களின் எண்ணத்தை கருத்தில் கொள்ளாமல் நடந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

கமல்ஹாசன் பேசியதாது:

அப்பா காங்கிரசில் இருந்தார். அவரிடம் இளம் வயதில் காந்தியை விமரிசித்திருக்கிறேன். அதற்கு அப்பாவோ வரலாற்றை படி என்பார். பிறகு 24, 25 வயதில் காந்தியை பற்றி நானே தெரிந்து கொண்டேன். பிறகு அவரது ரசிகனாகவும் ஆகி விட்டேன்.

அதை அடிப்படையாக வைத்தே ஹேராம் படத்தை எடுத்தேன். அந்தப் படத்தில் நானும் ஒரு கொலையாளியாக நடித்தேன். ஹேராம் படம், காந்திஜியை கொல்ல முயல்பவரின் கதை. ஆனால் அவருக்கும் உண்மைக்கும் அருகே செல்ல செல்ல கொலையாளி மாறிவிடுகிறான். ஆனால் அது மிகவும் தாமதம். அவனுடன் இருந்தவர் அதைச் செய்துவிடுகிறார். ஆனால் என்ன அவன் மனம் மாறி விட்டான்.

இது தான் ஹேராம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இது உங்களின் யோசனையா? என்று ராகுல் காந்தி கேட்க, “ஆம், இது என் தந்தையிடம் நான் கேட்கும் மன்னிப்பு” என்று கமல் பதிலளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.