“பெண் காவலருக்கு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு…” – எடப்பாடி, அண்ணாமலை காட்டம்

சென்னை, விருகம்பாக்கத்தில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ., பிரபாகர ராஜா உள்ளிட்டோர் திமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவருக்கு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றசாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுகவின் பொதுக் கூட்டத்தில் பெண் காவலர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய திமுக நிர்வாகிகள்… பாதுகாப்பு தருபவர்களையே தன் கட்சியினரிடம் இருந்து பாதுகாக்க முடியாத, காவல்துறையின் பொறுப்பாளராக இருக்கக்கூடிய இந்த கையாளாகாத முதல்வருக்கு எனது கடுமையான கண்டனங்கள்.

இது போன்ற தொடர் சம்பவங்கள், இவரின் விடியா ஆட்சியில் சாமானிய பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நம்மைக் காக்கும் பெண்களை நாமே காக்க வேண்டிய சூழ்நிலை, உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்து, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று ட்விட்டரில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில், “பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்களை கைது செய்ய முற்பட்ட காவல்துறையினரிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உச்சகட்ட அவலம்.

அண்ணாமலை

மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது திமுக-வுக்கு வாடிக்கையாக இருந்தாலும், திமுக நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்ற பொதுக் கூட்டத்திலும் இவ்வாறு திமுக நிர்வாகிகள் நடந்து கொண்டது அதிகார மமதையின் வெளிப்பாடாகவே தெரிகிறது. இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு திமுக நிர்வாகிகளையும் கைது செய்ய முதல்வர் ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.