'ஆமா.. நான் ப்ளே பாய் தான்..!' – மாஜி பிரதமர் இம்ரான் கான் பளீச்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஒரு பெண்ணிடம் ஆபாசமாக பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி பரபரப்பான நிலையில், அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இம்ரான் கான் தலைமையிலான அரசு, கடந்த ஆண்டு கவிழ்ந்தது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத இம்ரான் கான், தனது தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதற்கு வெளிநாட்டு சதி இருப்பதாகக் கூறி வருகிறார்.

இதற்கிடையே, அண்மையில், இம்ரான் கான், போனில் ஒரு பெண்ணிடம் ஆபாசமாக பேசுவது போன்ற ‘ஆடியோ’ ஒன்றை, அந்த நாட்டின் பத்திரிகையாளர் சையது அலி ஹைதர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த ஆடியோ பாகிஸ்தானில் மட்டுமன்றி, உலகம் முழுதுமே பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், “இந்த ஆடியோ போலியானது,” என இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் அர்ஸ்லன் காலித் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இம்ரான் கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்ற ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவை சந்தித்தேன். அப்போது எனது கட்சியை சேர்ந்த சிலரின் ஆடியோ மற்றும் வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாக அவர் கூறினார். மேலும் அவர் என்னை ‘ப்ளே பாய்’ எனவும் கூறியிருந்தார்.

பனிப்புயல், கனமழை வெள்ளம்… நியூ இயரில் அமெரிக்காவுக்கு அடி மேல் அடி!

ஆமாம் கடந்த காலத்தில் நான் ப்ளே பாய் தான். நான் ஒருபோதும் மிகவும் நல்லவனாக, ஏஞ்சலை போல இருந்துள்ளதாக கூறியதில்லை. இது போன்ற ஆபாசமான ஆடியோ அல்லது வீடியோவை வெளியிட்டு நாம் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறோம்? நான் பதவியில் இருந்து நீக்கப்பட பஜ்வாவும் ஒரு முக்கிய காரணம். அவர் திட்டமிட்டு என்னை ஏமாற்றி விட்டார். அவர் ‘டபுள் கேம்’ ஆடிவிட்டார்.

என்னிடம் நல்லவன் போலவே நடித்து, ஷெபாஸ் ஷெரீப்பை பிரதமராக்கும் நடவடிக்கையில் இறங்கினார் என்பதை அறிந்து கொண்டேன். பஜ்வா என் முதுகில் குத்தி விட்டார். இப்போது தேர்தல் நடந்தாலும் நான் வெற்றிப் பெறுவேன் என்பது அனைவருக்கும் தெரியும். அதை தடுக்கவே ராணுவத்தில் பஜ்வா, ஒரு ‘செட்-அப்’பை செய்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.