மேலக்கோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வசதிகள்

வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் 15 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு ஜிம்னாஷியம், செயற்கையிழை ஓடுதளம் மற்றும் ஆசிரியர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், விளையாட்டிற்கான

உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூரில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் 7 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 400 மீட்டர் செயற்கையிழை ஓடுதளம், 5 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு ஜிம்னாஷியம் மற்றும் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான குடியிருப்புகள், என மொத்தம் 15 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு

மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் / உறுப்பினர் செயலர் மருத்துவர்

கா.ப. கார்த்திகேயன், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டார்கள் என இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.