சமீபத்தில் உஸ்பெகிஸ்தான் நாட்டில், இருமல் டானிக் பருகிய குழந்தைகள் மரணமடைந்திருப்பதாக வந்திருக்கும் செய்தி அனைவரையும் திடுக்கிடச் செய்துள்ளது. இதற்கு முன்பு இந்தோனேசியாவிலும், ஆப்பிரிக்க நாடான கானாவிலும் இதேபோல இருமல் டானிக் உட்கொண்ட குழந்தைகள் இறந்த துயர் சம்பவத்தை எளிதில் கடந்து செல்ல முடியாது. இதில் கானா நாடு, அதன் ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு, டானிக் அருந்தாத குழந்தைகளும் இறந்துள்ளதால் இருமல் டானிக்கை உறுதியாகக் குற்றம் சாட்ட முடியாது என்று கூறியிருக்கிறது.
குழந்தைகள் இறப்புக்குக் காரணமாகக் குற்றம்சாட்டப்படும் இருமல் டானிக்குகள், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதால் நமது கவனம் இவ்விஷயத்தில் இன்னும் அதிகமாகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இருமல் டானிக்குகள்தான் உலகச் சந்தையில் பெரும்பங்கு வகிக்கின்றன.

இருமல் டானிக்குகளை உற்பத்தி செய்யும் வேதியியல் வினையின்போது உருவாகும் ரசாயனமான டை எதிலின் க்ளைகால், சராசரியாக இருக்க வேண்டிய அளவுகளை விட சற்று கூடுதலாக இருந்தால், அது விஷமாக மாறிவிடும் வாய்ப்பு உண்டு. அதிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும்போது, அவர்களுக்கு தீவிர சிறுநீரக பாதிப்பை உண்டாக்கும் நிலையும் ஏற்படக்கூடும்.
எனவே, இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டுக் கழகமானது நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் தரத்தை இன்னும் தீவிரமாக ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். இது போன்ற துயர நிகழ்வுகள் நடந்த பிறகு மருந்து கம்பெனிகளை சீல் வைப்பதை விடவும் முன்னெச்சரிக்கையாக மருந்துகளின் உற்பத்தி தரத்தை உயர்த்த ஆவண செய்வது கட்டாயம்.
இந்திய மருந்துச் சந்தையில் கிடைக்கும் இருமல் டானிக்குகளில் பெரும்பாலானவை, பல மருந்துகள் அடங்கிய கூட்டுக் கலவை. இந்தக் கலவையான டானிக்குகளில் 2% மட்டுமே மெய்யான மருத்துவத் தேவைகளுக்குப் பரிந்துரைக்க உகந்த கலவைகள். மற்றவை, ஒரே குழுவைச் சேர்ந்த இரு மருந்துகளைக் கொண்டோ, நேரதிர் வேலைகளைச் செய்யும் இரு மருந்துகளை ஒன்றிணைத்தோ உருவாக்கப்பட்டுள்ள டானிக்குகள் என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு இருமல் ஏற்படும் போது கட்டாயம் குழந்தைகள் நல மருத்துவரிடமோ, பொதுநல மருத்துவரிடமோ நேரில் ஆலோசனை பெற்று, அவர் நாடிமானி கொண்டு நுரையீரலைப் பரிசோதனை செய்த பின் பரிந்துரைக்கும் டானிக்குகளைக் கொடுப்பதே சரியான பழக்கம். ஆனால் மருத்துவர்களிடம் காத்திருக்க வேண்டுமே என்று கருதியும், மருத்துவர் கட்டணத்தை மிச்சப்படுத்தும் நோக்கிலும், பெற்றோர்கள் நேரடியாக மருந்தகங்களில் இருமல் டானிக்குகள் வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போக்கு இருப்பதைக் காண முடிகிறது. இது ஆபத்தான பழக்கம்.

ஒரு குழந்தைக்கு சளி, இருமல் பிரச்னை ஏற்பட்டு, மருத்துவரை சந்திக்கும் போது, அவர் அந்த இருமலின் காரணத்தை முதலில் கண்டறிவார். அது வறட்டு இருமலா, அல்லது சளி வரும் இருமலா, கிருமித் தொற்றால் இருமல் ஏற்பட்டுள்ளதா, அல்லது ஒவ்வாமை காரணமா என்பதையும் அறிந்துகொள்வார். வறட்டு இருமலுக்கு ஒருவித மருந்து, அதுவே இளைப்பு என்றால் ஒருவித மருந்து. கிருமித் தொற்று இருந்தால் இன்னொருவித மருந்து, இருமலின்போது சளி வெளிப்பட்டால் அதை வெளிக்கொணரும் மருந்து என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான மருந்து வழங்கப்பட வேண்டும்.
ஆஸ்துமா, அலர்ஜி இருக்கும் குழந்தைகளுக்கு சுவாசப்பாதையை விரிவடையச் செய்யும் மருந்துகள் தேவைப்படும். இன்னும் தீவிரமான சுவாசப்பிரச்னை இருப்பின் ஸ்டீராய்டு டானிக்குகள் கூடவே மருந்தை நெபுலைசேஷன் செய்ய வேண்டும்.
தீவிரமான சளித்தொற்றாக இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய சூழலும் கூட இருக்கலாம். எனவே, குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் என்றால் மருத்துவரை விரைவாக சந்திப்பதே சிறந்தது. காலத்தைக் கடத்தி விட்டு மருத்துவரை நாடுவது பிரச்னையை வளரவிட்டு ஆபத்தில் முடியக்கூடும்.
டெக்ஸ்ட்ரோமெதார்பன் (Dextromethorphan), கோடின் (Codeine) போன்ற இருமல் மருந்துகள் குழந்தைகளுக்குக் கட்டாயம் வழங்கக் கூடாதவையாக இருக்கின்றன. நான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கே டெக்ஸ்ட்ரோமெதர்பன் வழங்கலாம். இன்னும் சில பெற்றோர்கள் நன்றாக தூங்க வைக்க, இருமல் டானிக்குகளை குழந்தைகளுக்குக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அது மிகத் தவறான போக்கு. இருமல் டானிக்குகளுக்கு குழந்தைகளை பழக்கப்படுத்திவிட்டால், பின்னர் அது இல்லாமல் குழந்தை உறங்காது.
இருமல் மருந்து பயன்படுத்தினால் தூக்கம் வருமா, அப்படி தூங்கும்போது இருமல் வராதா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. அது, எந்தக் காரணத்துக்காக இருமல் மருந்து வழங்கப்படுகிறது என்பதை பொறுத்தது. உதாரணமாக, குழந்தைக்கு தொண்டையில் தொற்று ஏற்பட்டு, வறட்டு இருமல் இருந்து, அதற்காகப் பரிந்துரைக்கப்படும் டானிக்கால் இருமல் கட்டுப்படுத்தப்படும். இருமல் தொல்லையின்றி இருப்பதால் குழந்தை உறங்கும். சில டானிக்குகளில், தூங்கவைக்கும் (Sedation) மூலக்கூறுகளும் இருக்கும். ஆனால், இருமலுக்கான காரணம் நுரையீரலில் அலர்ஜி, சுவாசப்பாதையின் கடைசிப்பகுதியில் அலர்ஜி போன்றவையாக இருந்தால் வழக்கமான இருமல் டானிக்குகள் கைக்கொடுக்காது. இருமல் தொடர்ந்துகொண்டே இருக்கும். மருத்துவப் பரிசோதனையின் அடிப்படையிலேயே அதற்குரிய மருந்து பரிந்துரைக்கப்பப்டும்.

பல இருமல் மருந்துக் கலவைகளில், காய்ச்சலுக்கான மருந்தான பாராசிட்டமாலும் கலந்து தயாரிக்கப்படுகிறது. இதை அறியாத பெற்றோர் மருந்தகங்களில் சென்று பிள்ளைக்குக் காய்ச்சல், இருமல் என்று கூறி காய்ச்சலுக்கென்று ஒரு டானிக்கும், இருமலுக்கென்று ஒரு டானிக்கும் வாங்கி வருவர்.
காய்ச்சலுக்கான டானிக்கில் பாராசிட்டமால் இருக்கும். இருமலுக்கான டானிக் கலவையிலும் பாராசிட்டமால் இருக்கும். இரண்டையும் ஒருசேர குழந்தைக்குக் கொடுக்கும் போது பாராசிட்டமால் விஷத்தன்மை ஏற்பட்டு குழந்தையின் கல்லீரல் பாதிக்கப்பட்டு, உயிரை பாதிக்கும் நிலைகூட வரலாம். எனவே, பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்குக் காய்ச்சல், சளி, இருமல் வந்தால், மருத்துவ அறிவுரையைப் பெற எப்போதும் தவறக்கூடாது. சுய மருத்துவம் செய்யவே கூடாது. மருத்துவர் பரிந்துரையில் மருந்தை உட்கொள்வதே எப்போதும் பாதுகாப்பானது.