`இன்றைய இளைஞர்களுக்கு திருமணத்துக்கு பெண் கிடைக்கறதில்ல…’- மத்திய அரசை சாடிய சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், மகாராஷ்ட்ராவில் நிகழும் வேலைவாய்ப்பின்மை குறித்து பேசுகையில் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் ஒரு இடத்தில், “வேலையின்மையால் பல சமூக பிரச்னைகள் எழுந்துள்ளன. இளைஞர்களுக்கு திருமண வயது வந்த பின்னர்கூட, வேலை இல்லாததால் பெண் கிடைக்காமல் இருக்கின்றனர்” என்றுள்ளார் அவர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜன் ஜகர் யாத்ராவை கொடியசைத்து தொடங்கிவைத்த பின்னர் பேசுகையில் இக்கருத்தை அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய விவசாய நலத்துறை அமைச்சரான சரத் பவார், “இங்கு இரு சமூகங்களுக்கு இடையே பிரச்னைகள் எப்போதும் உருவாக்கப்படுகின்றன. அதன்மூலம் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மையை மறைக்க அரசு முயல்கிறது. நாட்டில் நிலவும் பசியை பற்றி நாம் பேசியாக வேண்டும். நம் விவசாயிகள் உற்பத்தியை பெருக்குகின்றனர்.
ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள், உற்பத்திக்கு ஈடான பணத்தை விவசாயிகளுக்கு தருவதில்லை. அதற்கு பதிலாக இடைத்தரகர்களுக்கு அவற்றை கொடுக்கவே விரும்புகின்றனர். இப்படி செய்வதால், சாமாணியர்களை பணவீக்கத்தின் கோர பிடியில் தள்ளுகின்றனர் அவர்கள்.
image
நம் நாட்டில் இளைஞர்கள் எல்லோரும் படித்துள்ளனர். எல்லோருக்கும் வேலை கேட்கும் உரிமை இருக்கிறது. ஆனால் வேலை கிடைப்பதில்லை. மகாராஷ்ட்ராவில் தொழிற்சாலைகள் எல்லாம் வெளியேறிக்கொண்டிருக்கிறது. அவர்களை தக்கவைக்க இங்கு வசதிகள் இல்லை. புதிதாக தொழில் தொடங்கவும் யாரும் ஊக்கவிக்கப்படுவதில்லை. இதனால் வேலைவாய்ப்பின்மை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
ஒருமுறை, 25 – 30 வயதுக்குட்பட்ட சுமார் 15 – 20 இளைஞர்களை நான் சந்தித்தேன். அவர்களிடம் எதார்த்தமாக என்ன செய்கின்றீர்கள் எனக் கேட்டதற்கு, தங்கள் கிராமத்தில், வேலைக்கு செல்லாமல் சும்மா இருப்பதாக என்னிடம் சொன்னார்கள். அவர்கள் எல்லோருமே பட்டதாரி இளைஞர்கள்தாம். சிலர் முதுநிலை படித்திருந்தார்கள். அவர்களுக்கே வேலையில்லை. திருமணம் ஆகிவிட்டதா என அவர்களிடம் கேட்டேன். யாருக்குமே ஆகவில்லையென்றார்கள். ஏனென்று கேட்டதற்கு, வேலை இல்லாததால் திருமணம் ஆகவில்லை என்றார்கள்.
image
இந்த சூழல், அந்த ஒரு இடத்தில் மட்டுமில்லை… மாநிலத்தின் எல்லா கிராமங்களிலும் இருக்கிறது. அவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பது, சுயதொழிலுக்கு ஊக்குவிப்பது என்று செயல்படாத இந்த அரசு, அவர்களுக்குள் இரு சமூகத்தினருக்கிடையே சண்டையை மூட்டிவிடுகிறது. மதத்தின் பெயரிலும் சாதியின் பெயரிலும் சண்டைகள் உருவாக்கப்படுகின்றன. ஏன் இப்படி செய்ய வேண்டும்? ஏனென்றால், அவர்களால் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை” என்றுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.