அஜித்தின் ‘துணிவு’ ட்ரெய்லர் சாதனையை முறியடிக்காத விஜய்யின் ‘வாரிசு’!

அஜித்தின் ‘துணிவு’ படத்தின் ட்ரெய்லரை சாதனையை ஒருநாளில் விஜய்யின் ‘வாரிசு’ படம் முறியடிக்க முடியவில்லை. அதேநேரத்தில் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் சாதனையை ‘துணிவு’ படத்தின் ட்ரெய்லர் நெருங்கி வருகிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித்தின் 61-வது படமாக உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த மாதம் 31-ம் தேதி யூட்யூப் தளத்தில் வெளியானது. வெளியான ஒருமணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களையும், 24 மணிநேரத்தில் 30 மில்லியனுக்கு கூடுதலான பார்வையாளர்களையும் பெற்றதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார்.

அதேநேரத்தில், ‘துணிவு’ படத்தின் ட்ரெய்லர் 24 மணிநேரத்தில் 24.96 மில்லியன் பார்வையாளர்களையும், 1.1 மில்லியன் லைக்குகளையுமே பெற்றதாகவும் கூறப்பட்டது. இதனால், விஜய்யின் முந்தையப் படமான ‘பீஸ்ட்’ படத்தின் ட்ரெய்லர் சாதனையை, ‘துணிவு’ படத்தின் ட்ரெய்லரால் முறியடிக்க முடியவில்லை என்று விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்து வந்தனர்.

அதாவது ‘பீஸ்ட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி 24 மணிநேரத்தில் 29.08 மில்லியன் பார்வையாளர்களை பெற்றதுடன், 2.2 மில்லியன் லைக்குகளும் கிடைத்தது என்றும், மேலும் தென்னிந்திய திரைப்படங்களில் அதிவேகத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற ட்ரெய்லர் என்ற சாதனையைப் பெற்றதாகவும் ரசிகர்கள் கூறிவந்தனர்.

#Beast trailer vs. #Thunivu trailer 24 hrs status.

More likes & more updated views – #ThalapathyVijay wins easily..  pic.twitter.com/atIyOqFOXP

— VCD (@VCDtweets) January 1, 2023

இந்நிலையில், ‘துணிவு’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய இருப் படங்களின் சாதனைகளையுமே விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ற வகையில், நேற்று மாலை 5 மணிக்கு யூட்யூப் தளத்தில் வெளியான ஒரு மணிநேரத்தில் ‘வாரிசு’ படத்தின் ட்ரெய்லர் 5 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி, ‘துணிவு’ படத்தை முந்தி வந்தது.

ஆனால், விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர், கடந்த 24 மணி நேரத்தில் 23.05 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது. மேலும் 1.8 மில்லியன் லைக்குகளும் கிடைத்துள்ளது. ஆனால், நேற்று மாலை 7 மணிக்கு ‘வாரிசு’ படத்தின் தெலுங்கு ட்ரெய்லரும் வெளியான நிலையில், இரண்டும் சேர்த்து மொத்தம் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக, படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அஜித்தின் ‘துணிவு’ படத்தின் ட்ரெய்லர் அதிகம் விளம்பரப்படுத்தப்பட்டதாலேயே அது அதிகளவில் வியூஸ் பெற்றதாகவும், விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் ட்ரெய்லர் அதிகளவில் விளம்பரப்படுத்தப்படாமலேயே 23 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேநேரத்தில் கிட்டத்தட்ட 5 நாட்களுக்குள்ளேயே ‘துணிவு’ படத்தின் ட்ரெய்லர் 53 மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ள நிலையில், விரைவில் ‘விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் ட்ரெயலர் சாதனையான 60 மில்லியன் பார்வையாளர்களை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் படம் நன்றாக இருந்தால் மட்டுமே திரையரங்கை நோக்கி பார்வையாளர்கள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.