முதுமலை: காட்டுப்பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்; வளர்ப்பு பன்றி விற்பனைக்கு தற்காலிகத் தடை

நீலகிரி மாவட்டம் குந்தா, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டுப்பன்றிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றன. இதே போல் கடந்த சில நாள்களாக முதுமலை பகுதிகளிலும் காட்டுப்பன்றிகள் உயிரிழந்து வருகின்றன. இறந்த காட்டுப்பன்றிகளின் உடல் பாகங்களை வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் சேகரித்து இந்திய கால்நடை ஆய்வு மையத்துக்கு அனுப்பியிருந்தனர்.

காட்டுப்பன்றிகள்

முதுமலையை ஒட்டியிருக்கும் கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உயிரிழந்த காட்டுப்பன்றிகளுக்கு ஆப்ரிக்க பன்றி காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் உயிரிழந்த பன்றிகளுக்கும் இதே தொற்று பரவியிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆப்ரிக்க பன்றி காய்ச்சல் பரவல் குறித்துப் பேசிய தெரிவித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், “நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள தெப்பகாடு வரவேற்பு மையம் அருகில் அதிக எண்ணிக்கையில் காட்டுப்பன்றிகள் இறந்திருக்கின்றன. அவற்றைப் பிரேத பரிசோதனை செய்து இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு மாதிரிகள் அனுப்பி வைத்ததில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. முதுமலை புலிகள் காப்பகத்தின் 10 கி.மீ சுற்றளவிலுள்ள பன்றி வளர்ப்பு பண்ணைகளில் கால்நடை மருத்துவக்குழு சோதனை மேற்கொண்டனர். வளர்ப்பு பன்றிகளுக்கு இதுவரை ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்படவில்லை. பண்ணையைச் சுற்றிலும் வேலி அமைத்து காட்டு பன்றிகள் பண்ணை அருகில் நுழையாத வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்

பண்ணையைச் சுற்றிலும் சோடியம் ஹைப்போ குளோரைட் அல்லது கால்சியம் ஹைப்போ குளோரைட் (பிளிச்சிங் பவுடர்) காஷ்டிக் சோடா தெளிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. கால்நடை மருத்துவக் குழுவினர் கூடலூர் பகுதிகளிலுள்ள பண்ணைகளை நாள்தோறும் கண்காணித்து வருகின்றனர். பண்ணை உரிமையாளர்கள் தாங்கள் வளர்க்கும் பன்றிகளை இந்த நோயின் தாக்கம் குறையும் வரை விற்பனைக்காக வெளியில் எடுத்துச் செல்ல தற்காலிக தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

மீறுவோர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நோய் பன்றிகளை மட்டுமே தாக்க கூடியது. மற்ற விலங்குகளுக்கோ மனிதர்களுக்கோ பரவாது. எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.