ஆட்சி மாற்றம் தமிழ் மக்களுக்கு நல்லது – திருமாவளவன்

அப்போது பேசிய அவர், “ முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து 13 ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டன. ஆனால் இன்னும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை.குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. காணாமல் போன தமிழ் மக்களின் நிலை என்ன என்பதை அங்குள்ள ஆட்சியாளர்கள் தெளிவுப்படுத்தவில்லை. புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஐநா சபையில் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் அதுவும் ஏமாற்றத்துடன் இருக்கிறது. இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் தமிழ் மக்களுக்கு நல்லது நிகழும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தார்கள் ஆனால் தமிழ் மக்கள் இன்னும் கவனிக்கப்படாமலேயே கிடக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆனாலும் இலங்கை தமிழ் மக்கள் மீது எந்த நகர்வும் செய்யப்படவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது என்ன நடந்ததோ அதேதான் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகும். இலங்கைத் தமிழ் மக்களுக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை. இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்திய அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இலங்கையில் 13ஆவது சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது.

இந்தியாவில் சனாதன சக்திகள் ஒரே தேசம் ஒரே கட்சி என்ற அரசியலை எப்படி முன்னெடுத்து செல்கிறார்களோ அதே போன்று சிங்களவர்களும் ஒரே தேசம் ஒரே மதம் ஒரே கலாசாரம் என்கிற அடிப்படையில் கடந்த பத்தாண்டுகளாக செயல்பட்டுவருகிறார்கள். ஒரே தேசம் ஒரே மதம்  என்கிற சிங்களவர்களின் மேலாதிக்க போக்குதான் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவருக்கு முழு காரணம்.

சிங்கள அரசின் பேரினவாத  போக்கிற்கு ஆதரவாக செயல்படுவதை இந்திய அரசு கைவிட வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்துகிறோம். இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி என்பது மிகவும் அபாயகரமான விஷயம். சனாதன சக்திகள் மீண்டும் தலைவிரித்தாட வழிவகை செய்துவிடும். காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் ஆட்சியில் இருந்தபோது ஈழத்தமிழர்கள் பிரச்னையில் தீர்வு காண்பதில் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்கள்.

இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் 13ஆவது அரசியல் சட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வு காண தேவைப்பட்டால் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்திப்போம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.