ஒருவர் கையில் எல்லா தியேட்டர்களும் வந்துவிட்டால் நிலை என்னவாகும்? – திருமா கொதிப்பு

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு
திமுக
ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அரசு எந்திரம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ் சினிமாவில் எந்த பெரிய படம் வந்தாலும் அது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலமாகத்தான் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றசாட்டுகள் வைக்கப்படுகின்றன.

சமூக ஊடகங்களில் அதுகுறித்த விவாதமும் நடக்கிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் அதே குற்றசாட்டை வைத்தார். மேலும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலமாக இல்லாமல் வெளியிடப்படும் திரைப்படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை எனவும் வேறு வழியில்லாமல் படங்களை ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கே கொடுக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் சினிமா விநியோகம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பவருமான திருமாவளவன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று இரும்பன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன் கூறியது; தயாரிப்பாளர் ராஜன் பேசுகையில், லட்சங்களில் சம்பளம் வாங்கிய நடிகர்கள், நடிகைகள் இன்று கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். அந்த நடிகர்களின் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் இன்று மருந்து வாங்கி சாப்பிடக்கூட காசு இல்லாமல் உள்ளனர் என்று அவர் உருக்கமாக கூறினார். இந்த இடைவெளியில் இப்படி ஒரு முரண் எப்படி வந்தது? எதனால் நடந்தது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். ஒரு நபரின் கையில் ஒட்டுமொத்த திரையரங்குகளின் நிர்வாகமும் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றால் படத்தை வெளியிடுகின்ற விநியோகஸ்தர்கள் நிலை என்ன என்பதை யோசிக்க வேண்டும்.

திரைத்துறையும் கார்ப்பரேட்டுக்கு இரையாகி கொண்டிருக்கிறது. யாரையும் மனதில் வைத்துக்கொண்டோ, எதிராகவோ நான் பேசவில்லை, சமூக பொறுப்புணர்வு என்ற அடிப்படையில் பேசுகின்றேன். தமிழக திரைத்துறை அரசியலையே மாற்றக்கூடிய வல்லமை பெற்றுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக அரசியல் வரலாற்றை பார்த்தால் அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் சினிமாவில் இருந்து வந்தவர்கள்தான். தமிழக அரசியலை திரைத்துறைதான் தீர்மானித்துள்ளது என இவ்வாறு திருமாவளவன் பேசியுள்ளார். இந்த விழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.