சென்னை: பணிநிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என்று செவிலியர்கள் அறிவித்துள்ளனர்.
செனனை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் உடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது: “கரோனா பேரிடர் உச்சத்தில் இருந்த நேரத்தில், அன்றைய அரசால் ஏப்ரல் 28-ம் தேதியன்று, மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் குறிப்பாக 2570 செவிலியர்கள் தற்காலிக பணி நியமனங்கள் குறித்து ஓர் அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
இப்படியாக ஓர் அரசாணை 2020 ஏப்ரல் 28 அன்று வெளியிடப்பட்டு 2300 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அன்று முதல் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில், தற்காலிக பணியாளர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு 6 மாதத்திற்குப் பிறகும், அவர்களது பணி நீட்டிப்பு என்பது தொடர்ச்சியாக செய்யப்பட்டுக் கொண்டே வந்தது.
இந்த நிலையில், பேரிடர் முடிவுக்கு வந்தச் சூழலில், அவர்கள் அந்த பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அந்தச் சூழலில் அவர்கள் தமிழக முதல்வருக்கு வைத்த கோரிக்கையை ஏற்று, பேரிடர் காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் என்பதால், அவர்களுக்கு பணி பாதிப்பு இருக்கக் கூடாது என்ற வழியில் ஒரு மாற்று யோசனையாக மாவட்ட ஹெல்த் சொசைட்டி (டிபிஎச்), மக்களைத் தேடி மருத்துவம், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் ஆகிய துறைகளில் இருக்கிற காலிப்பணியிடங்களை இவர்களைக் கொண்டு நிரப்பிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தினார்.
அந்த வகையில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதுவரை தற்காலிக பணி நியமனத்துக்காக ரூ.14 ஆயிரம் மாத ஊதியமாக பெற்றுவந்த நிலையில், இந்த புதிய பணியில் ரூ.18 ஆயிரம் வரை கிடைக்கும். மேலும், ஏற்கெனவே இருக்கிற தற்காலிக பணி நியமனங்களின் மூலம், இவர்களில் பெரும்பாலானவர்கள் தலைமையகங்களில் உள்ள மருத்துவமனைகளில்தான் பணியாற்றி வருகின்றனர். இவர்களும் பலமுறை சொந்த ஊருக்கு அருகில் இடமாற்றம் செய்ய கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், தற்காலிக பணியாளர்களை இடமாற்றம் செய்வது இயலாத காரியமாக இருந்தது.
இந்நிலையில், ஒரு நல்ல வாய்ப்பாக என்எச்எம் நிதி ஆதாரத்தின்கீழ், மாவட்ட ஹெல்த் சொசைட்டி மூலம் வழங்கப்படும் பணி மிகப்பெரிய பணிப் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், அவர்கள் ஏற்கெனவே இருப்பது போலவே பணியில் தொடர வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்று அவர்களுடன் 2 மணி நேரம் பேசியிருக்கிறோம். அவர்களுக்கான பணி நியமன உத்தரவுகளில் தெளிவாக, தற்காலிக பணி என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீண்ட நேரம் துறையின் உயர் அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
அவர்கள் என்எச்எம் நிதி ஆதாரத்தின்கீழ், மாவட்ட ஹெல்த் சொசைட்டி மூலம் வழங்கப்படும் பணி வேண்டாம் என்கிறார்கள். தற்போதுள்ள நிலையிலே நீட்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இது கரோனா காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணி, அந்த நிலை தற்போது இல்லை என்பதால், முடியாது என்று அலுவலர்கள் எடுத்துக் கூறினர். அவர்கள் பிடிவாதமாக ஒரே கருத்தாக, மாவட்ட ஹெல்த் சொசைட்டி மூலம் வழங்கப்படும் பணி வேண்டாம் என்கிறார்கள். தமிழக அரசு நிதி ஆதாரத்தின்கீழ் பணி வழங்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.
எனவே, மாவட்ட ஹெல்த் சொசைட்டி மூலம் வழங்கப்படும் பணிக்கு ஆணைகள் வெளியிடப்பட்ட பிறகு வரும் திங்கள்கிழமை முதல் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். அவர்களது கோரிக்கையின்படி பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை. அவர்கள் பணிநியமன உத்தரவுகளிலும் தற்காலிக பணி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் அவர்களுக்கு பணி வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் யோசிப்பார்கள் என்று கருதுகிறோம். மாவட்ட ஹெல்த் சொசைட்டி பணிகள் குறித்த ஆணைகளை வெளியிட்ட பிறகு மீண்டும் அவர்களை அழைத்து பேச இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
போராட்டம் தொடரும்: இந்நிலையில், அமைச்சருடன் சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என்று செவிலியர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.