சென்னை: “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இல்லையென்றால் இன்றைக்கு எதிர்க்கட்சியே இல்லாத நிலைக்கு வந்திருக்கும். கையில் அத்தனை தரவுகளையும் வைத்திருக்கிறார். ஐபிஎஸ் வரை படிப்பது சாதாரண காரியம் இல்லை” என்று இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவரும், பெரம்பலூர் எம்.பி.யுமான பாரிவேந்தர் கூறியுள்ளார்.
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி எம்.பி,யுமான பாரிவேந்தர் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நிருபர்களும் கொஞ்சம் சூழ்நிலைகளை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். அண்ணாமலை சிறிய வயதில் ஒரு பெரிய பதவிக்கு வந்திருக்கிறார். அவர் ஒரு மிகச் சிறந்த அறிவாளி.
அவர் இல்லையென்றால் இன்றைக்கு எதிர்க்கட்சியே இல்லாத நிலைக்கு வந்திருக்கும். கையில் அத்தனை தரவுகளையும் வைத்திருக்கிறார். ஐபிஎஸ் வரை படிப்பது சாதாரண காரியம் இல்லை. அத்தனை தரவுகளும், வரலாறுகளும் அறிவியல்பூர்வமாக வைத்திருக்கிறார். எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கிறார்.
அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பிற்கு, இருக்கிற அத்தனை நிருபர்களும் வந்துவிடுகின்றனர். கேள்விகளுக்கு பதில் கேட்டு சத்தம் போடுகின்றனர். அவருக்கான சூழ்நிலை, பிரச்சினைகளில் இருக்கும்போது, நிருபர்கள் போட்டிப் போட்டிக்கொண்டு சில கேள்விகளை கேட்பது என்பது முறையல்ல. இப்போது நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள், கேள்வி கேட்கிறீர்கள்… பதில் சொல்கிறேன். ஆனால், ஒருவர் கேட்பதற்குள் அடுத்தவர் என தொடர்வதால், சூழ்நிலை மாறிப்போகிறது.
தமிழ்நாட்டிற்கு தேவையான ஒரு சிறந்த தலைவராக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இருக்கிறார். எனவே அன்றைய தினம் நிகழ்ந்த சம்பவம் ஒரு எதிர்பாராத நிகழ்ச்சி” என்று பாரிவேந்தர் எம்.பி கூறினார்.