புதுடெல்லி: அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ரூ.50 லட்சம் உதவித்தொகை திட்டத்தில் யாரும் பயனடையவில்லை என்று பாஜ எம்பி வருண் காந்தி கூறியுள்ளார். ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு வருண் காந்தி எம்பி கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘ ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அனைத்து வகையான அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சைக்கு ரூ.50 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை எந்த ஒரு நோயாளியும் பலன் பெறவில்லை. இதனால், 432 நோயாளிகள் சிகிச்சைக்கு வழியின்றி பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
அதில் பெரும்பாலானவர்கள் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள். குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் கவுச்சர், எம்பிஎஸ் 1, எம்பிஎஸ் 2 மற்றும் பேப்ரி உள்ளிட்ட லைசோசோமால் ஸ்டோரேஜ் டிசார்டரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 10 சிகிச்சை மையங்களில் ஒன்று கூட அரிய வகை நோயாளிகளுக்கான உதவித் தொகைக்காக அரசிடம் விண்ணப்பிக்கவில்லை என்று தெரியவருகிறது. அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக காத்திருந்த 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்த குழந்தைகளுக்கான சிகிச்சையை ஒன்றிய அரசின் சிறப்பு மையங்களில் உடனடியாக தொடங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.