எப்படி அழைக்க வேண்டும் என எங்களுக்கு தெரியும் கொதிப்படைய செய்யவே ஆர்.என்.ரவி ஆளுநராக அனுப்பப்பட்டுள்ளார்: வேலூரில் கே.எஸ்.அழகிரி பேட்டி

வேலூர்: நாம் கொதிப்படைய வேண்டிய விஷயங்களை பேசுவதற்காகவே ஆர்.என்.ரவி ஆளுநராக அனுப்பப்பட்டுள்ளார் என்று வேலூரில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார். வேலூர் சத்துவாச்சாரியில் தமிழ்நாடு பாரா வாலிபால் சங்கம் நடத்தும் மாநில அளவிலான ஆண் மற்றும் பெண் மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் விளையாட்டு போட்டியை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டை எவ்வாறு அழைப்பது என்பது நமக்குத் தான் தெரியும். ஆளுநர் சொல்லித்தர வேண்டியதில்லை. தமிழ்நாடு என்பது தான் நம்முடைய நாடு, தமிழ்நாட்டைப்போலத்தான் ஆந்திரா, பஞ்சாப், கேரளா ஒரு நாடு. இவற்றையெல்லாம் உள்ளடக்கியது தான் இந்தியா.

நாடுகளுடைய கூட்டமைப்பு தான் தேசம். இந்தியா என்பது ஒரு தேசம். ஆளுநர் ஒன்றை சொல்லிவிட்டார் என்பதற்காக நாம் கொதிப்படைய வேண்டாம். நாம் கொதிப்படைய வேண்டிய விஷயத்தை சொல்வதற்காக தான் ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பப்பட்டுள்ளார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்துக்களுடைய பண்டிகைக்கு முதல்வர் வாழ்த்து சொல்வாரா? என பாஜ கேட்டுள்ளது. தமிழர் திருநாள் எனக் கூறப்படும் பொங்கல் இந்து பண்டிகை தானே, பொங்கலுக்கு வாழ்த்து சொல்கிறோம் அல்லவா, அப்படி என்றால் பாஜ தமிழர் திருநாள் பொங்கலை தமிழர் பண்டிகையாக கருதவில்லையா? இது என்ன வெளிநாட்டில் இருந்து வந்த கலாச்சாரமா? பொங்கல் இந்து பண்டிகை தான்.  

நீங்கள் தான் இந்த நாட்டில் கலவரத்தை, வேற்றுமையை உருவாக்க விரும்புகிறீர்கள். நீங்கள் தான் பொங்கல் பண்டிகையை இந்து பண்டிகையாகவும், இந்து கலாச்சாரமாகவும் கருதவில்லை. ஏனென்றால் தமிழகத்தில் உள்ள பாஜ, தமிழ் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை அவர்கள் வேறு கலாச்சாரத்தில் உள்ளார்கள். எனவே அவர்கள் நமது கலாச்சார வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டும்.

கமல்ஹாசன் ராகுல் சந்திப்பு வரவேற்கக் கூடிய ஒன்று. அவர் தேசிய உணர்வு உள்ள தமிழர். இன்றைய நிலையில் ராகுல் காந்தி தான் இந்தியா போன்ற தேசத்திற்கு தலைமை ஏற்க முடியும் என உறுதியாக நம்புகிறார். அதனுடைய வெளிப்பாடுதான் ராகுல் காந்தியோடு கமல்ஹாசன் நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.