புதுடெல்லி: தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார். டிசம்பரில் டெல்லி அடைந்த பின் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பிறகு 9 நாள் இடைவெளிக்கு பின் ஜனவரி 3-ல் மீண்டும் தொடங்கியது. உ.பி.யில் நுழைந்த ராகுல், அதன் மேற்குப்பகுதி மாவட்டங்கள் வழியாக வெறும் 3 நாளில் கடந்துள்ளார். இம்மாநிலம் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருப்பதுடன் அவரது முன்னாள் தொகுதியான அமேதி மற்றும் சோனியாவின் ரேபரேலியையும் கொண்டுள்ளது. இதனால், அகிலேஷ் சிங் யாதவின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கு பெற்றால் அதிக நாட்கள் உ.பி.யில் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க முன்வராததால் யாத்திரையை ராகுல் 3 நாளில் முடித்துள்ளார்.
எனினும், ராகுலுக்கு உபி.யில் விவசாயிகளும், முஸ்லிம்களும் வரவேற்பு அளித்தனர். இந்த இரண்டு பிரிவினரும் மேற்குப் பகுதியில் அதிகமாக உள்ளதன் பலன் ராகுலுக்கு கிடைத்துள்ளது. இவர் தொடர்ந்து யாத்திரை கூட்டங்களில், பாஜகவையும் அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால், ராகுல் கூட்டத்தில் முஸ்லிம் பெண்களுடன் அப்பகுதியின் மதரஸாக்களிலிருந்து மவுலானாக்களும், அதன் மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
பாக்பத்தை கடந்த ராகுலின் யாத்திரை மீண்டும் ஹரியானாவில் நுழைந்துள்ளது. இங்கிருந்து பஞ்சாப் வழியாக அது, ஜம்மு-காஷ்மீரை அடைய உள்ளது. உபியில் ராகுலுடன் அவரது முன்னாள் தொகுதியான அமேதி யிலிருந்தும், தாய் சோனியாவின் ரேபரேலி யில் இருந்தும் காங் கிரஸ் தொண்டர்கள் வந்து பங்கேற்றனர். இவர்கள் 2024 மக்களவையில் மீண்டும் போட்டியிட வேண்டும் என ராகுலிடம் வலியுறுத்தினர்.
பாத யாத்திரை நடத்தும் ராகுலுக்கு, அயோத்தி ராமர் கோயிலின் பூசாரி வாழ்த்து அனுப்பி ஆதரவு தெரிவித்திருந்தார். உபி. சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் 2027-ல் நடைபெறும். இதற்கு முன்பாக 2024-ல் மக்களவை தேர்தல் வர உள்ளது. எனவே, உ.பி.யின் ராகுல் யாத்திரையால் உண்மையிலேயே மாற்றம் இருந்தால் அது, மக்களவை தேர்தலில் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.