பட்ஜெட் தொடருக்கு முன்பு மத்திய அமைச்சரவை மாற்றம்?

புதுடெல்லி: வரும் 2024 மக்களவை தேர்தலின் அரை இறுதி போட்டியாக இந்த ஆண்டு நடைபெற உள்ள 10 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் அமைந்துள்ளன. இந்த தேர்தலில் வெற்றி பெற, மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அமைச்சரவையை மாற்றி அமைக்க விரும்புகிறது.

இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்கூட்டத் தொடருக்கு முன்பாக அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சமீபத்தில் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த குஜராத் மாநில பாஜக.வினருக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது.

மேலும், இந்த ஆண்டு தேர்தல் வரவிருக்கும் 10 மாநிலங்களில் பாஜக.வில் செல்வாக்கு உள்ளவர்களும் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளனர். பாஜக.வின் 2-வது முறை ஆட்சி காலத்தில் நடைபெறும் கடைசி அமைச்சரவை மாற்றத்தில் தகுதியான பாஜக தலைவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் மத்திய அமைச்சரவை வட்டாரங்கள் கூறும்போது, ‘செயல்படாத அமைச்சர்களை பிரதமர் மோடி தொடர்ந்து அமைச் சரவையிலிருந்து நீக்கி வருகிறார்.

மூத்த அமைச்சர்கள்: எனவே, இந்த முறையும் அதுபோன்றவர்களுடன் வயதில் மூத்த சில அமைச்சர்களும் பதவி யில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் 10 மாநில சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல்களிலும் களம் இறக்கப்படுவார்கள். இதில், தமிழகத்திற்கும் கட்டாயமாக ஒரு அமைச்சர் பதவி உண்டு’’ எனத் தெரிவித்தன.

கடைசியாக மோடி அமைச்சரவை கடந்த ஆண்டு ஜுன் 8-ம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது 12 அமைச்சர்கள் மாற்றப்பட்டனர். அதேவகையில் இந்த முறையும் அதிக எண்ணிக்கையில் அமைச்சர்கள் மாற்றப்பட உள்ளனர். இதில், மக்களவை எம்.பி.க்களுக்கும், குறிப்பாக தனி தொகுதியை சேர்ந்த பெண் எம்.பி.க்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி சமீபத்தில் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

கட்சியிலும் மாற்றம்: அடுத்த ஆண்டு வரவிருக்கும் மக்களவை தேர்தலை மனதில் வைத்து இதேபோன்ற மாற்றங்களை நிர்வாகிகள் மத்தியிலும் பாஜக செய்ய உள்ளது. குறிப்பாக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பிநட்டாவின் பதவிக் காலம் இந்த மாதம் நிறைவு பெற உள்ளது. மொத்தம் 3 ஆண்டு காலமுள்ள அவரது பதவிக்கு மேலும் ஒரு முறை நீட்டிப்பு அளிக்கப்பட உள்ளது. இதற்கு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் நட்டாவிற்கு நல்ல புரிந்துணர்வு இருப்பது காரணம்.

அமித் ஷாவுக்கும் வாய்ப்பு: தலைவர் நட்டாவுடன் தேசிய அளவில் மேலும் பல முக்கிய நிர்வாகிகள் புதிதாக அமர்த்தப்பட உள்ளனர். இதன் இறுதி முடிவு ஜனவரி 16, 17-ம் தேதிகளில் நடைபெறவிருக்கும் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளன.

தேர்தல் ஆலோசனை: அதன்பிறகு பாஜக தலைவர் நட்டாவுடன் இணைந்து தேர்தல் ஆலோசனை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் அமைச்சர் அமித் ஷா தேர்தல் பொறுப்பாளராக இருந்து கட்சிக்கு வெற்றியை தேடித்தந்தது நினைவு கூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.