தமிழக பாஜகவில் ஆடியோ வீடியோ விவகாரம் கடந்த சில வாரங்களாக பூதாகரமாகியுள்ளது. டெய்சி மற்றும் அலிஷா அப்துல்லா ஆகியோர் மீது அக்கட்சியில் இருந்து விலகிய சூர்யா சிவா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் வெளிப்படையாக பேசிய சில விவகாரங்கள் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய நிலையில், திடீரென அக்கட்சியின் முகமாக இருந்த காயத்திரி ரகுராமும் விலகுவதாக அறிவித்தார்.
அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் தமிழக பாஜகவுக்கு தலைமை பொறுப்பேற்ற பிறகே ஹனி டிராப் விவகாரம் பூதாகரமாகியிருப்பதாகவும், இது குறித்து கட்சி மேலிடத்துக்கு புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அலிஷா அப்துல்லாவிடம் சர்ச்சை குறித்து விளக்கம் கேட்ட மாநில தலைமை, தன்னிடம் அத்தகைய விளக்கம் மற்றும் ஆதரவை கொடுக்கவில்லை எனவும் காயத்திரி ரகுராம் குற்றம்சாட்டியிருந்தார்.
அவருக்கு இப்போது தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா பதிலளித்துள்ளார். மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா நினைவாக பாஜக சார்பில் மகளிர் கால்பந்து போட்டி சென்னை பெரம்பூர் பகுதியில் அமைந்துள்ள திரையரங்க வளாகத்தின் உள் அரங்கில் நடைபெற்றது. இதனை பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அலிஷா அப்துல்லா, தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காயத்திரி ரகுராம் கூறிய குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார். அவர் பேசும்போது, ” நானும் பிஜேபி யில் தான் இருக்கிறேன். பாதுகாப்பு இருக்கிறது. எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. காயத்திரி ரகுராம் தற்போது கட்சியில் இல்லை. கட்சியில் இல்லாத நபர் பேசுவதை சீரியசாக எடுக்க வேண்டாம்” என தெரிவித்தார்.