இந்தியாவின் முதன்மையான தொழிலதிபரான கவுதம் அதானி தன் வாழ்நாளில் சந்தித்த நெருக்கடியான சமயங்களை நினைவு கூர்ந்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், 26/11 தாக்குதல் குறித்த பதைபதைக்கும் நினைவுகளை பகிர்ந்துள்ளார். மேலும் தான் கடத்தப்பட்டதையும் கவுதம் அதானி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவர் பேசும்போது, ” கெட்ட காலத்தை மறப்பது நல்லது. ஒவ்வொரு சூழ்நிலைக்கும் என்னை மாற்றிக்கொள்கிறேன். 1997ஆம் ஆண்டு நான் கடத்தப்பட்டேன். கடத்தல் நடந்த மறுநாளே நான் விடுவிக்கப்பட்டேன்.
ஆனால் நான் கடத்தப்பட்ட இரவு நிம்மதியாக தூங்கினேன். ஏனென்றால் கையில் இல்லாத விஷயங்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவது பயனளிக்காது. யாரும் தங்கள் கையில் இல்லாததைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று நான் நம்புகிறேன். விதி தானே முடிவு செய்யும். 26 நவம்பர் 2008 பயங்கரவாத தாக்குதலின்போது தாஜ் ஹோட்டலில் தான் இருந்தேன். அதில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன். நண்பர் ஒருவருடன் இரவு உணவுக்காக தாஜ் ஓட்டலுக்கு சென்றிருந்தேன்.
கண் முன்னே பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அந்த பயங்கர காட்சியை மிக அருகில் பார்த்தேன். ஆனால் பீதியடையவில்லை, ஏனென்றால் பீதியால் எதுவும் நடக்கப் போவதில்லை. பில் குடித்துவிட்டு வெளியே செல்லவிருந்த நேரத்தில் தீவிரவாத தாக்குதல் தொடங்கியது. அன்று இரவு முழுவதும் பயத்தில் கழித்தேன். சில நிமிடங்களுக்கு முன்பே வெளியேறியிருந்தால், தப்பித்திருக்கலாம். காலை 7 மணிக்குப் பிறகு, கமாண்டோக்களின் முழு பாதுகாப்பு கிடைத்தது.
வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளால் அதிகம் கவலைப்படுவதில்லை. கடின உழைப்பு மட்டுமே வெற்றிக்கான திறவுகோல். அனைவரும் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும். நாட்டின் 22 மாநிலங்களில் எனது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை அதானி குழுமம் ஏலம் எடுக்காமல் எந்த தொழிலிலும் ஈடுபடவில்லை. துறைமுகம், விமான நிலையம், பவர் ஹவுஸ், உள்கட்டமைப்பு என அனைத்து இடங்களிலும் விதிகளுக்கு உட்பட்டு பணிகள் நடந்துள்ளன. ராகுல் காந்தி நாட்டின் முன்னேற்றத்தை விரும்புகிறார். ஆவேசத்தில் எதையாவது பேசினாலும், வளர்ச்சிக்கு எதிரானவர் அல்ல” எனக் கூறினார்.