அமைச்சர்களின் பேச்சை அரசு அதிகாரிகள் கேட்பதில்லை… டாக்டர்கள் சங்கம் பகிரங்க குற்றச்சாட்டு!

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் , தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் டாக்டர் ஜி .ஆர்.இரவீந்திரநாத் கூறியதாவது:

எம்.ஆர்.பி. கோவிட் செவிலியர்களின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து அவர்களுக்கு பணி பாதுகாப்பும், பணி நிரந்தரமும் வழங்கிட வேண்டும். எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்கள் மற்றும் தினக்கூலி பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் RCH திட்டத்தில் 18 ஆண்டுகளாக பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

தமிழ்நாடு அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒப்பந்த அடிப்படையில் 2020 மார்ச் மாத உத்தரவு மூலம் , 3700 செவிலியர்களை ஒரு சில மாதங்களிலேயே நியமித்தது. 2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட MRB தேர்வை எழுதி, அதில் தேர்ச்சி பெற்றவர்கள்தான் இடஒதுக்கீடு முறையில் ,உரிய சான்றிதழ் சரிபார்பிற்குப் பின் முறையாக பணிநியமனம் செய்யப்பட்டனர்.

எம்.ஆர்.பி தேர்வில் வெற்றி பெற்றிருந்த அந்த செவிலியர்களை , கட்டாயமாக பணியில் சேர்ந்தே ஆக வேண்டும் என வற்புறுத்தி பணியில் சேர்க்கப்பட்டனர். “மூன்று நாட்களில் பணியில் சேராவிட்டால் 2019 எம்.ஆர்.பி பட்டியலில் இருந்து நீக்கப்படுவீர்கள்,எதிர்காலத்தில் வேறு எந்த அரசு வேலையிலும் சேர்க்கப்பட மாட்டீர்கள் ” எனவும் அழைப்பாணை மூலம் மிரட்டப்பட்டனர்.

அவர்களுக்கு, மாதத் தொகுப்பூதியமாக வெறும் ரூ 14,000 மட்டுமே வழங்கப்பட்டது. கொரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வெறும் ரூ 14000 தொகுப்பூதியம் என்பது வெட்கக் கேடான நடவடிக்கையாகும். கடும் உழைப்புச் சுரண்டலாகும். அத்தகைய குறைந்த ஊதியத்துடன் கடுமையாக உழைத்தனர். ஒவ்வொரு நாளும் 12.00 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தனர்.

இச்செவிலியர்கள் கொரோனா நோயாளிகளுக்கு, மூன்று அலைகளிலும் தங்கள் உயிரையும் துச்சமெனக் கருதி அர்ப்பணிப்போடு சேவை செய்தனர். ஆயிரக்கணக்கான நோயாளிகளை காப்பாற்றினர். இரண்டரை ஆண்டுகளாக , தொடர்ச்சியாக அதே 14,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் அவர்கள் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் , இச்செவிலியர்கள் 2,472 பேரையும், 31.12.2022 அன்று திடீரென்று பணி நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும், மனவேதனையையும் அளிக்கிறது. எனவே, பணி நீக்க உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பணி பாதுகாப்பு, பணி நீட்டிப்பு வழங்க வேண்டும். படிப்படியாக பணிநிரந்தரம் வழங்கிட வேண்டும்.

கடந்த 6 மாதகாலமாக அவர்களில் பெரும்பாலோருக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை. ஆறு மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தையும் உடனடியாக வழங்கிட வேண்டும். கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்டு , சிறப்பாக சேவை செய்த, எம்.ஆர்.பி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த மருத்துவர்களையும் , செவிலிய உதவியாளர்களையும், பல்நோக்கு மருத்துவப் பணியார்களையும் ,இதர பணியாளர்களையும் பணி நீக்கம் செய்தது சரியல்ல. அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.

மேலும் “மத்திய அரசுடைய கொள்கை, மத்திய அரசுடைய தேசிய சுகாதார இயக்கம் ” என்ற காரணங்களை கூறி, தமிழக அரசு, தனது செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணி நியமனக் கொள்கையை முற்றிலும் கைவிடுவது ஏற்புடையது அல்ல. மாநில உரிமையை பறிகொடுப்பது சரியல்ல.

கொரானா காலத்தில் மருத்துவ தேர்வுகள் கால தாமதமாக நடத்தப்பட்டன. எனவே, முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத , எப்போதும் உள்ளது போல் மார்ச் 31 தேதிக்கு பதிலாக, மே 31 தேதி வரை பயிற்சி மருத்துவம் செய்யும் மருத்துவ மாணவர்களை அனுமதிக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள போராட்டங்களுக்கு தங்களது சங்கம் முழு ஆதரவை தரும். உலக வங்கியின் பேச்சைக் கேட்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் செயல்படுகிறார்கள். மாநில அமைச்சர்கள் மற்றும் மாநில அரசின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் மறுக்கிறார்கள் எனவும் .இரவீந்திரநாத் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர். சாந்தி, தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர் நலச்சங்கத்தின் திருச்சி மாவட்ட அமைப்பாளர் எம்.பொன்ராஜ், ஆரம்ப சுகாதார நிலைய RCH ஒப்பந்த சுகாதார துப்புரவுப் பணியாளர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் என்.எஸ். செல்வராஜ், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.