பொங்கல் பரிசு டோக்கன் பத்திரம்… குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் மகிழ்ச்சி தகவல்!

பொங்கல் பரிசு 2023… பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பரிசுத் தொகுப்பு இன்று முதல் வழங்கப்பட உள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு பொங்கல் பரிசை தமிழக மக்களால் மறக்கவே முடியாது. ஏனெனில் 2,500 ரூபாய் ரொக்கம், அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு என பரிசுத் தொகுப்பு ஆகியவை வழங்கப்பட்டன. கொரோனா நெருக்கடியில் தவித்து வந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்தது. 2022ல் ரொக்கம் வழங்கப்படவில்லை.

மு.க.ஸ்டாலின் உத்தரவு

21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது. அதிலும் பொருட்களின் தரம் தொடர்பாக சர்ச்சை எழுந்து அரசு பெரும் சங்கடத்திற்கு ஆளானது. இந்நிலையில் நடப்பாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி 1,000 ரூபாய் ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். ரொக்கம் அதிகமாக இல்லை.

பொங்கல் பரிசு டோக்கன்

பரிசுத் தொகுப்பு பெரிதாக இல்லை என சலசலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கிடையில் கடந்த 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் வழங்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இந்த சூழலில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை இன்றைய தினம் (ஜனவரி 9) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இன்று தொடக்கம்

சென்னை காமராஜர் சாலையில் தீவுத்திடல் எதிரே உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக முதல்வர் விநியோகிக்கிறார். இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் குடும்பத்தினர் என 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

அதிகாரிகளுக்கு உத்தரவு

இதற்காக தமிழக அரசு 2,430 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனை உங்கள் குடும்ப அட்டைகள் இருக்கும் நியாய விலைக் கடைகளில் இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் பரிசு விநியோகம் செய்யும் வகையில் வரும் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என்றும், அதற்கு பதிலாக வரும் 27ஆம் தேதி விடுமுறை விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான பொருட்கள் தரமாக இருக்க வேண்டும். இதனை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

வரும் 12ஆம் தேதி வரை

ஒருநாளில் அதிகப்படியான மக்கள் வருகை புரிந்து கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் காவல்துறையின் உதவியை பெறலாம். தொழில்நுட்ப கோளாறு காரணமாக கைரேகை சரிபார்க்கப்படவில்லை எனில், அதற்கான பதிவேட்டில் கையொப்பம் பெற்று பொருட்களை வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் 12ஆம் தேதி வரை டோக்கன் வரிசைப்படி பொங்கல் பரிசு வழங்கப்படும். ஜனவரி 13ஆம் தேதி விடுபட்ட அனைவருக்கும் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.