கோவா: சில தினங்களுக்கு முன்பு நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ‘ஏர் இந்தியா’ விமானத்தில் ஆண் பயணி ஒருவர் மதுபோதையில், அருகில் இருந்த பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். இந்தச் சூழலில், கோவாவில் மனோகர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லவிருந்த ‘கோ பர்ஸ்ட்’ விமானத்தில் இரு வெளிநாட்டு ஆண் பயணிகள், பணிப்பெண்களை கிண்டலடித்துள்ளனர். பணிப்பெண்களை அழைத்து தங்கள் அருகில் உட்காருமாறு இருவரும் கூறியுள்ளனர். மேலும், தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
அந்தப் பணிப்பெண்கள் அவ்விரு பயணிகளிடம், இவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம் என்று தன்மையாகக் கூறியுள்ளனர். ஆனால், அப்போதும் அந்த இரு ஆண் பயணிகள் தங்கள் சீண்டலை நிறுத்திக் கொள்ளவில்லை. இதனால், கோபமடைந்த சக பயணிகள் அவ்விருவரை விமானத்திலிருந்து வெளியேற்றுமாறு கூறினர். இது தொடர்பாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவ்விரு பயணிகளும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அந்த இருவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலை விமான நிறுவனம் வெளியிடவில்லை. எனினும், அவ்விருவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.