புதுடெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிரிடி மாவட்டத்தில் 4,478 அடி உயரத்தில் பாரஸ்நாத் மலை அமைந்துள்ளது. சரணாலயப் பகுதியான இதில் சிறுபான்மை ஜெயின் சமூகத்தினரின் முக்கிய கோயில் உள்ளது. சம்மத் ஷிகன்ஜி தீர்த் என்று அழைக்கப்படும் இந்தக் கோயில், ஜெயினர்களின் 24 தீர்த்தங்கரர்களில் ஒருவரான பாசவநாத் எனும் பாரஸ்நாத்துக்கானது. இவர் 23-வது தீர்த்தங்கரர் என்பதால் அவரது புனிதக் கோயிலை ஜெயினர்கள் மிக முக்கியமாகக் கருதுகின்றனர்.
இந்நிலையில், பாரஸ்நாத் மலையை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல சுற்றுலாத் தலமாக்க உள்ளதாக கடந்த 2019-ல் முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான முந்தைய பாஜக அரசு அறிவித்தது. ஆனால் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
இந்நிலையில், இதற்கான பணிகளை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி அரசு தற்போது தொடங்கியது. இதற்கு ஜெயின் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுற்றுலாவாசிகளின் மது, மாமிசம் உள்ளிட்ட செயல்பாடுகளால் கோயிலின் புனிதம் கெட்டு விடும் என ஜெயினர்கள் அஞ்சினர்.
டெல்லி, மும்பை, போபால், உள்ளிட்ட நகரங்களில் ஜெயினர்கள் சில நாட்களாக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினர். ஜார்க்கண்ட் அரசின் முடிவுக்கு எதிராக சென்னையிலும் போராட்டம் நடத்தப்பட்டது.
இதனிடையே, மத்திய சுற்றுச்சூழல், வனப்பாதுகாப்பு துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை, ஜெயின் சமூகத்தின் முக்கியத் தலைவர்கள் நேரில் சந்தித்தனர். இதையடுத்து ஜெயினரின் புனிதத்தலத்தை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல சுற்றுலாத் தலமாக்க தேவையில்லை என மத்திய அரசு நேற்று முன்தினம் முடிவு எடுத்தது. இந்த முடிவை ஜார்க்கண்ட் அரசுக்கும் தெரிவித்து, திட்டத்தை நிறுத்தும்படி அறிவுறுத்தியது.
இத்துடன், ஷிகன்ஜி தீர்த்தங்கரரின் கோயிலை சுற்றியுள்ள பகுதியில் மது அருந்துதல் மற்றும் மது விற்பனையை தடுக்க வேண்டும் என ஜார்க்கண்ட் அரசை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதே கருத்தை மத்திய சுற்றுலா அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டியும் தெரிவித்துள்ளார். “ஜெயின் சமூகத்தினர் மனம் புண்படும் வகையில் எந்த நடவடிக்கையும் ஜார்க்கண்டில் எடுக்கக் கூடாது. இவர்களது புனிதத் தலங்களில் ஒன்று அமைந்துள்ள இடத்தை மாநில அரசு பாதுகாக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் ஜெயின் சமூகத்தினர் நாடு முழுவதிலும் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு ஜெயின் சமூகத்தினர் நன்றி தெரிவித்து வருகின்றனர். ஜார்க்கண்ட் அரசின் நடவடிக்கையை எதிர்த்து ஜெய்ப்பூரில் ஜெயின் சமூகத்தின் சுக்ய சாகர் மஹராஜ் (72) என்ற சாது, கடந்த டிசம்பர் 25 முதல் உண்ணாவிரதம் இருந்தார். இதில் கடந்த 30-ம் தேதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாடு முழுவதிலும் உள்ள வனப்பகுதிகள், பொதுப் பட்டியலில் உள்ளன. இதனால் வனப் பகுதியில் மாநில அரசுகள் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த மத்திய அரசிடம் அனுமதி பெறுவது அவசியம் ஆகும்.