சமூக ஊடங்கங்கள் மூலமாக சாதாரண நபர்களும் பிரபலமாகி வரும் நிலையில் சமீபகாலமாக மருத்துவர் ஒருவர் பிரபலமாகி இருக்கிறார், அவர் தான் அனைவருக்கும் நன்கு அறிமுகமான சித்த மருத்துவர் ஷர்மிகா. குறுகிய காலத்திலேயே இவருக்கு பேரும், புகழும் கிடைத்துவிட்டது, சில யூடியூப் சேனல்கள் இவரை தத்தெடுத்தே விட்டது போல என்று நாம் நினைக்கும் அளவிற்கு இவரை சுற்றியே பல பேட்டிகள் அரங்கேறியது. இவரை இன்ஸ்டாகிராமில் பலர் பின்பற்றுகின்றனர், இவரது இயற்கை குறிப்புகளை கேட்பதற்காகவே பல ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். பலரும் ஷர்மிகாவின் அழகு குறிப்புகளை பின்பற்றி யூடியூப்களில் வீடியோக்களும் வெளியிட்டு வருகின்றனர். இப்படி ஒருபுறம் இவரது புகழ் பரவி கிடைக்க மற்றொரு புறம் இவர் சமூக வலைத்தளங்களில் கேலிக்குள்ளாகியுள்ளார்.
இப்போது பல மீம் க்ரியேட்டர்களுக்கும் டாக்டர்.ஷர்மிகா தான் கன்டென்ட் ஆகியிருக்கிறார், இவரை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். இவரை பலரும் ரசிப்பதற்கு காரணம் அதிகம் செலவு இல்லாமல் வீட்டிலுள்ள எளிமையான பொருட்களை வைத்தே வைத்தியம் சொல்லுவது தான். தனது வாயாலேயே பலரையும் கவர்ந்தவர் இப்போது தனது வாயாலேயே கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகின்றார். மக்களுக்கு பல எளிய குறிப்புகளை அள்ளி வீசிய இவர், எக்கச்சக்க உருட்டுக்களையும் அள்ளி வீசி உருட்டு டாக்டர் என்று அழைக்கப்படுகிறார். நுங்கு சீசனில் இரண்டு மாதங்கள் தொடர்ந்து நுங்கு சாப்பிட்டால் பெண்களுக்கு மார்பகம் பெரிதாகும் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.
அதன்பின்னர் திருமணமான அனைவருக்குமே குழந்தை பிறந்துவிடாது நல்லவர்களுக்கு மட்டுமே குழந்தை பிறக்கும், மனித உடலின் உறுப்புகள் போல இருக்கும் காய்கறி, பழங்களை சாப்பிடுவது அந்தந்த உறுப்புக்கு நல்லது என்று கூறி ட்ரோலுக்கு ஆளானார். இதுமட்டுமல்லாது குப்புறக்க படுத்தால் மார்பக புற்றுநோய் ஏற்படும், குளோப்ஜாமுன் சாப்பிட்டால் 3 கிலோ உடல் எடை கூடும் மற்றும் நம்மை விட உருவத்தில் பெரிய அளவிலான மாட்டின் கறியை சாப்பிட்டால் செரிக்காது, தெய்வமாக வழிபாடும் விலங்கை சாப்பிடக்கூடாது எனும் வார்த்தைக்கு தான் இவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். டாக்டர் ஷர்மிகாவின் தயார், டெய்சி பிஜேபி கட்சியில் இருப்பதால் தான் ஷர்மிகா மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார் என இவருக்கு பலரும் அரசியல் சாயம் பூசினார்கள்.
தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், தான் கூறிய சர்ச்சையான கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டும், விளக்கம் கொடுத்தும் டாக்டர்.ஷர்மிகா அவரது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். குலாப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் உடல் எடை 3 கிலோ அதிகரிக்கும் என்பது நான் வாய் தவறி சொன்னது தான், பொதுவாக இனிப்பு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் ஏனெனில் அதில் அதிக கலோரி உள்ளது. நான் தெரியாமல் சொல்லிவிட்டேன், 1008 பிரச்சனை என்று கூறுகிறோம், அபப்டியானால் 1008 பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தமில்லை. நானும் மனிதர் தான் சில சமயங்களில் நம்மை அறியாமல் ஒரு ஃப்ளோவில் வந்தது தான் இது, இது பிரைன் எரர் இல்லை இது ஹியூமன் எரர் என்று தெரிவித்துள்ளார். இதுபோன்று இவர் பேசிய விஷயங்கள் சர்ச்சைக்குள்ளான நிலையில் இந்திய மருத்துவ இயக்குனரகம் சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டிசுக்கு விளக்கம் கேட்டு 15 நாட்களுக்குள் பதிலளிக்க இந்திய மருத்துவ இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.