திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள பெத்திக்குப்பம் பகுதியில் குப்பன் (எ) குப்புசாமி-கஸ்தூரி தம்பதி வசித்து வந்தனர். இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான குப்பன், மதுபோதையில் அடிக்கடி தன் மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். கஸ்தூரியின் தாய் கல்யாணி, இவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே வசித்து வந்திருக்கிறார்.

கணவன் மனைவிக்கு இடையே சண்டை வரும்போதெல்லாம், கஸ்தூரி தன்னுடைய அம்மா வீட்டுக்குச் சென்றுவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் மதுபோதையில் வீட்டுக்கு வந்த குப்பன், கஸ்தூரியை அடித்ததாகக் கூறப்படுகிறது. அதனால், கஸ்தூரி தன்னுடைய அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதையடுத்து, தன்னுடைய மனைவியைச் சமாதானப்படுத்தி அழைத்துவர குப்பன் மாமியார் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.
அப்போது, குப்பனுக்கும் அவருடைய மாமியாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த குப்பன், வீட்டு சமையலறைக்குள் நுழைந்து கத்தியை எடுத்து மாமியாரைக் குத்தியிருக்கிறார். அதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கல்யாணியை, அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு கல்யாணியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியிருக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த போலீஸார், கல்யாணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் குப்பன் சரணடைந்தார். கொலை சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள். குடும்பத் தகராறு காரணமாக மருமகனே மாமியாரைக் கொலைசெய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.