சிவகங்கை மாவட்டம் கீழடியில் 18 சித்தர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு, மூத்த பாஜக நிர்வாகி, ஹெச். ராஜா வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் ஆளுநர் விவகாரம் குறித்து கேட்டபோது,”சட்டப்பேரவையில் ஆளுநர் உரை அன்று ஆளுநர் மட்டுமே பேச வேண்டும். முதலமைச்சர் பேசியது மரபு அல்ல.
இதை போன்று ஏற்க முடியாத விஷயங்களை ஆளுநர் படிக்காமல் தவிர்ப்பது என்பது புதிதல்ல. ஏற்கனவே ஆந்திரா, கேரளாவில் இந்த மாதிரி பிரசிடென்சி இருக்கிறது. ஆளுநர் இந்த ஊழல் அரசாங்கத்தை குறித்து உரையில் கூறமால் தவிர்த்து விட்டு சென்றதற்கு, ஆளுநருக்கு முதலமைச்சர் நன்றி தெரிவிக்க வேண்டும்.
அவ்வையார் பாரதியார் குறித்த கவிதைகளை ஆளுநர் படித்தது பிரிண்டில் போகாது என்று சொல்கிறார் ஸ்டாலின். திராவிட மாடல், அமைதி பூங்கா, இதெல்லாம் இருக்கும் என கூறுகிறார் அவர். ‘Stalin is more dangerous than Karunanidhi’ என ஒரு ஆண்டுக்கு முன்னே நான் சொன்னேன். தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் அதனை நிருபித்து கொண்டு இருக்கிறார். ‘He is most immature Chief Minister’ என்பது நிரூபணம் ஆகி உள்ளது.
தேசிய கீதத்தை ஆளுநர் அவமதிக்கவில்லை. முதலமைச்சர் பேசக்கூடாது, ஆனால் அதை மீறி முதல்வர் பேசியதால் ஆளுநர் அவையில் இருந்து சென்றார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை அன்று ஆளுநர் மட்டுமே பேச வேண்டும், முதலமைச்சர் பேசியது மரபு அல்ல. முதல்வர் தன்னுடைய நடவடிக்கைக்கு மன்னிப்பு கேட்பார், தன்னை திருத்திக் கொள்வார் என பாஜக நினைகின்றது எதிர்பார்கின்றது” என்றார்.
2023ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அரசு தயார் செய்து கொடுத்த உரையில் சிலவற்றை தவிர்த்ததாகவும், சிலவற்றை சேர்த்ததாகவும் ஆளுநர் ஆர்.ரன். ரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவையிலேயே கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, ஆளுநர் பேசியது அவை குறிப்பில் சேராது என்றும் அரசால் அச்சிடப்பட்ட ஆங்கில உரையும், அப்பாவு படித்த தமிழாக்கமும்தான் அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என தீர்மானம் கொண்டுவந்தார்.
இந்த தீர்மானம் ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அவையில் அறிவித்தபோதே, ஆளுநர் அங்கிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.