அரசியலமைப்பின் தெளிவற்ற வார்த்தை பிரயோகங்கள் திருத்தப்படும் வரையில் 13 ஐ திறம்பட அமுல்படுத்துவது சாத்தியமில்லை

மூன்று கட்டங்களாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது நடைமுறைச் சாத்தியமானதாக இருக்குமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ள எழுத்துமூல ஆவணத்திலேயே, இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பில் உள்ள தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்களால் உருவாகின்ற சிக்கல்கள் நீக்கப்படாவிடின், 13 ஆவது திருத்தச் சட்டத்தை திறம்பட அமுல்படுத்துவது சாத்தியமில்லை. இது, கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலான மாகாணசபை முறைமையின் அனுபவமாக இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் நோக்கில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைத்துள்ள அமைச்சரவை உபகுழுவில் அங்கம் வகிப்பதுடன், இவ் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி யால் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல்களிலும் தொடர்ச்சியாக பங்கேற்று வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ள எழுத்துமூல ஆவணத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாவது, ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தின் மூலமாகவும், நிர்வாக ஏற்பாடுகளுக் கூடாகவும் மத்திய அரசாங்கம் எடுத்துக் கொண்ட அதிகாரங்களை மீளவும் மாகாண அரசாங்கங்களிடம் கையளிப்பது முதலாவது கட்டம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று, 13 ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட சட்டங்களுள், 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல் படுத்துவதற்கு இடையூறாக இருக்கின்ற அல்லது முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையிலான சட்டங்களை ஆராய்ந்து, அவை 13 ஆவது திருத்தச் சட்டத்துடன் பொருந்தும் வகையில் சட்ட திருத்தங்களை மேற்கொள்தல் இரண்டாவது கட்டமாக தெரிவித்துள்ளார்.

மூன்றாவது கட்டமாக, 13 ஆவது திருத்தத்தின் சில விதிகளிலுள்ள தெளிவின்மையை நீக்குவதற்கும், தெளிவான முறையில் அதிகாரங்களை வரையறை செய்வதற்கும் மற்றும் ஒதுக்கீடு செய்வதற்கும், அத்தோடு சட்டமியற்றுதல், நிர்வாக, நீதித்துறை மற்றும் நிதி அதிகாரங்களை அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்கள் மூலம் பயன்படுத்துவதற்கான வரையறைகளை உருவாக்குவதற்கு தேவையான அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளுதல், போன்ற செயற்பாடுகளின் மூலம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ’13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து ஆரம்ப்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்க்க முடியுமென்பதை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி) மீண்டும் மீண்டும் கூறி வருகிறது.

இந்நிலைப்பாட்டில் நாங்கள் நீண்ட காலமாக நிலையாக இருந்து வருகிறோமென்றும் அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில அரசியல் கட்சிகள் தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக, 13ஆவது திருத்தம் தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றவில்லையென்று கூறினாலும், 1988ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்துக்கு முதன்முறையாக நடைபெற்ற தேர்தல்களைத் தவிர, கிழக்கு மாகாணத்தில் இரண்டு தடவைகளும் வடமாகாணத்தில் ஒரு முறையும் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் கலந்து கொண்டதுடன் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இது மாகாண சபை அமைப்பை ஏற்றுக்கொள்ளும் அனைவரினதும் விருப்பத்தை வெளிப்படுத்துகின்றது.

மற்ற மாகாணங்களிலும் மக்கள் இப்போது இந்த முறைக்கு பழகிவிட்டனர், அதைத் தொடர்வதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை.

13 ஆவது திருத்தத்தினூடான அதிகாரப் பகிர்வை சரியான முறையில் வரையறைப்படுத்தி அர்த்தமுள்ள முறையில் செயல்படுத்துவது ஒரு ஐக்கிய நாட்டிற்குள் பன்முகத்தன்மையையும் மற்றும் பன்மைத்தன்மையைக் கையாள்வதற்கான வழிமுறையையும் வலுப்படுத்துமென்று, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்த எழுத்து மூல ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.epdpnews.com

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.