உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஜோஷிமத் நகரம் ‘பூகோள சொர்க்கம்’ என்று குறிப்பிடப்படுகிறது. உத்தராகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் இருக்கும் இந்தக் நகரம், தற்போது நிலச்சரிவு அழிவு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜோஷிமத் நகரம் பூமிக்குள் புதைந்துவருவதால் வீடுகள் உள்பட ஏராளமான கட்டடங்கள் விரிசலடைந்திருக்கின்றன.

தற்போது, 603 கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். வசிக்க முடியாத அளவுக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்களை தற்காலிக முகாம்களில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னை குறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியைத் தொடர்புகொண்டு பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.
காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், இமயமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் பகுதிகள் அவ்வப்போது இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்துவருகின்றன. வரைமுறையின்றி அதிகரித்துவரும் கட்டுமானங்களும், வளர்ச்சித்திட்டங்கள் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் சாலைகள் உள்ளிட்ட திட்டங்களும் இயற்கைப் பேரிடர்களுக்கு முக்கியக் காரணம் என்று சூழலியல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்.

அந்தப் பகுதியில் பெரிய அளவிலான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று பல ஆண்டுகளுக்கு முன்பே நிபுணர் குழு எச்சரித்திருக்கிறது. அதை மீறி வரைமுறையில்லாமல் அங்கு கட்டுமானப் பணிகள் நடந்திருக்கின்றன. அதன் விளைவாக, நிலச்சரிவு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. 2013-ம் ஆண்டு கேதார்நாத்தில் ஏற்பட்ட வெள்ளமும் 2021-ம் ஆண்டு ரிஷி கங்கையில் ஏற்பட்ட திடீர் வெள்ளமும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தின. மேலும், அந்தப் பகுதிகள் எவ்வளவு அபாயத்தை எதிர்நோக்கியிருக்கின்றன என்பதையும் அவை உணர்த்தின. ஆனால், அந்த ஆபத்தை ஆட்சியாளர்கள் உணரவில்லை என்பதற்கு ஜோஷிமத் ஓர் உதாரணமாக மாறியிருக்கிறது.
தற்போது இந்தப் பிரச்னை குறித்து உத்தரகாண்ட் முதல்வருடன் பிரதமர் மோடி பேசியிருக்கிறார். அதையடுத்து, பல்வேறு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு முடுக்கிவிட்டிருக்கிறது. ஜோஷிமத் நகர் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது, அதற்கு உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்பது குறித்து ஆய்வுசெய்து பரிந்துரைகள் அளிக்க நிபுணர்கள் குழு பணிக்கப்பட்டிருக்கிறது. பிரதமருக்கான முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம், இந்திய மண்ணியல் ஆய்வு நிறுவனம், ஐ.ஐ.டி ரூர்கி, தேசிய நீரியல் நிறுவனம், மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள் ஆய்வுசெய்து அரசிடம் பரிந்துரைகள் அளிக்கவிருக்கிறார்கள். தற்போது, மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டிருக்கும் வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களை இடிப்பதற்கு நிபுணர் குழு பரிந்துரைத்திருக்கிறது. ஜோஷிமத் நகரத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்னையால், அந்தப் பகுதியில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு திட்டப்பணிகளை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.