பொங்கல் பண்டிகை அகப்பைகள் தயாரிக்கும் பணி தீவிரம்-ஊர்மக்களிடம் இலவசமாக வழங்கும் தொழிலாளர்கள்

வல்லம் : உழைக்கும் மக்களுக்கான பண்டிகை, இயற்கை தெய்வமான சூரியனை வழிபடுவதற்கும், மற்ற உயிரினங்களுக்கு நன்றி சொல்வதற்காகவும் கொண்டாடப்படும் பாரம்பரிய திருவிழா என்றால் அது பொங்கல் பண்டிகைதான். ஆடி மாதத்தில் விதைத்த நல்ல விதைகள், வளர்ந்து அதன் முழு பலன்களை அடையக்கூடிய, அறுவடை செய்யக்கூடிய பருவம் தான் தை மாதம். இவ்வாறு பயிர்கள் நன்கு விளைந்து விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் பெற உதவியாக இருந்த இயற்கையை அதாவது சூரியன், நிலம், பசுக்கள், கலப்பை ஆகியவற்றுக்கு நன்றி சொல்லும் விதமாக உணர்வுடன் கொண்டாடும் பொங்கல் பண்டிகை தமிழர்களுக்கு மிக முக்கியமான பண்டிகையாகும்.

அறுவடையில் கிடைத்த புது அரிசியை, வெல்லம், பால், நெய் சேர்த்து புது பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து வழிப்படுவர். தமிழர்களின் ஒழுக்கம், நாகரிகம், கலாச்சாரத்தை போற்றும் வகையில் கொண்டாடும் சிறப்புமிக்க திருநாள் இது. இத்தகைய பெருமை மிகு தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவின் போது தான் தமிழர்களின் பாரம்பரியம் வெளிப்படும். அந்த பாரம்பரிய விஷயத்தில் ஒன்றுதான் அகப்பை பயன்படுத்தும் விதம்.

பொங்கல் திருவிழாவின் போது புதிதாக அறுவடை செய்யப்பட்ட புதுநெல்லினை கொண்டு பச்சரிசியாக்கி அதனை மண்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைக்கப்படும் போது மண்பானையில் உள்ள அரிசியை கிளறுவதற்கு அகப்பையை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். தேங்காய் கொட்டாங்குச்சியை சுத்தம் செய்து, அதில் மூங்கிலை சீவி இரண்டடி நீளத்தில் கைப்பிடியாக்கி பயன்படுத்தி வந்தனர்.

அகப்பையை பயன்படுத்தும் போது, அதன் மணமும் பொங்கலின் சுவையும் அதிமாகும். ஆனால் நாகரீகம் வளர, வளர அகப்பை அகன்று கொள்ள சில்வர், பித்தளை கரண்டிகளின் அந்த இடத்தை பிடித்தது. இதனால் வருங்கால தலைமுறைக்கு அகப்பை என்றால் என்னவென்றே தெரியாத நிலைதான் உள்ளது. ஆனால் தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காட்டில் பொங்கல் தினத்தன்று பொங்கல் செய்ய அகப்பையை மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.

வேங்கராயன்குடிக்காட்டில் உள்ள தச்சுத்தொழிலாளர்கள், அகப்பையை தயாரித்து பொங்கலன்று காலையில் ஊர்மக்களிடம் வீட்டுக்கு வீடு சென்று வழங்குவர். இந்த அகப்பைக்கு பணம் பெறுவதில்லை. அதற்கு மாறாக ஒருபடி நெல்லும், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் மட்டுமே பெற்றுக் கொள்கின்றனர். இந்த வழக்கம் இன்றளவும் தொடர்கிறது. இந்த பொங்கலுக்கும் தொடர்கிறது.

இதுகுறித்து அகப்பை தயாரித்து தருபவர்கள் கூறுகையில், எங்களது மூதாதையர் காலந்தொட்டு நாங்கள் தச்சுத் தொழில் தான் செய்து வருகிறோம். இங்கு பதினைந்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இதில் ஈடுபட்டுள்ளோம். பொங்கல் வந்து விட்டாலே பாரம்பரியமான அகப்பை தயாரிக்கும் பணியில் இறங்கி விடுவோம். இதற்காக ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்பட்ட தேங்காய் கொட்டாங்குச்சியை சேகரித்து வைத்து பின்னர் அதனை பொங்கல் சில நாட்களுக்கு முன்பு தண்ணீரில் ஊறவைத்து அதனை உளியால் பக்குவமாக செதுக்குவோம்.

மூங்கிலை வெட்டி அதில் இரண்டடி துண்டுகளாக நறுக்கி கைப்பிடி தயாரித்து பின்னர் அதில் கொட்டாங்குச்சியை இணைத்துவிட்டால் அகப்பை ரெடியாகிவிடும். இதை நாங்கள் யாரும் விலைக்கு விற்பனை செய்வதில்லை. எங்களது கிராம மக்களுக்கு பொங்கலன்று பயன்படுத்த வழங்குகிறோம். நாங்கள் காலையிலேயே வீடு வீடாக சென்று கொடுத்து விடுவோம்.
பின்னர் பொங்கலன்றே மதியம் எந்தந்த வீடுகளுக்கு அகப்பை கொடுத்தோமோ அங்கு சென்றால் அவர்கள் தேங்காய், பழம், வெற்றிலை – பாக்கு, ஒரு படி நெல் கொடுத்து எங்களை கவுரவிப்பார்கள். இந்த பாரம்பரியம் இன்றளவும் தொடர்கிறது என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.