கும்பகோணத்தில் பாமக முன்னாள் பிரமுகர் கொலை : 2 இடங்களில் சாலை மறியல்

கும்பகோணம்: கும்பகோணத்தில் பாமக முன்னாள் பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தை அடுத்த சோழபுரம், மேலானமேட்டைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் திருஞானசம்பந்தம் (51), விவசாயியான இவர், பாமக முன்னாள் பேரூர் நகரத் தலைவராக இருந்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவருக்கும் இவரது வீட்டின் அருகிலுள்ள ராஜேந்திரனுக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், திருஞானசம்பந்தத்தை, கடந்த ஆகஸ்ட் மாதம், ராஜேந்திரன் மற்றும் சிலர் தாக்கியுள்ளனர். இது குறித்து சோழபுரம் போலீஸார், வழக்கு பதிந்து, அவர்களை கைது செய்தனர்.

பின்னர், இவர்கள், நிபந்தனை ஜாமீனில் அண்மையில் வந்தனர். இந்த நிலையில் திருஞானசம்பந்தத்தை, இன்று காலை அரிவாளால் ராஜேந்திரன் மற்றும் சிலர் வெட்டினர். இதில் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் திருஞானசம்பந்தம் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த சோழபுரம் போலீஸார், வழக்கு பதிந்து தலைமறைவாகியுள்ள ராஜேந்திரன் மற்றும் சிலரை தேடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு வந்த திருஞானசம்பந்தத்தின் உறவினர்கள், சோழபுரம் போலீஸார், உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததை கண்டித்தும், ராஜேந்திரன் மற்றும் சிலரை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் மருத்துவமனை வாயிலிலும், சோழபுரம் கடைத்தெருவிலும்,சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.