பொள்ளாச்சி : பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் வரத்து அதிகரிப்பால், மூன்று மாதத்திற்கு பிறகு மீண்டும் விலை குறைவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சியில் உள்ள வெங்காய மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்காக தினமும் கொண்டு வரப்படுகிறது. இதனை சுற்று வட்டார கிராம பகுதி வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் அதிகம் வாங்கி செல்கின்றனர்.
கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழைக்கு பிறகு வடகிழக்கு பருவமழையும் அடுத்தடுத்து பெய்ததால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெங்காயம் அறுவடை பாதிக்கப்பட்டது. மேலும், சில மாவட்டங்களில் அக்டோபர் மாதம் துவக்கத்தில் இருந்து புதிய வெங்காயம் சாகுபடியால், மார்க்கெட்டுக்கு மேலும் வரத்து குறைந்து அதன் விலை உயர ஆரம்பித்தது.
கடந்த மூன்று மாதமாக சின்ன வெங்காயம் ரூ.90 முதல் அதிகபட்சமாக ரூ.120வரை விற்பனையானது. இந்நிலையில், பருவமழை குறைந்து கடந்த இரண்டு வாரத்துக்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகமானது. இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை துவங்கி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், கடந்த ஒரு வாரமாக, பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகமானது. இதில் நேற்றைய நிலவரப்படி, சின்னவெங்காயம் மொத்த விலைக்கு முதல் தரம் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரையிலும். இரண்டாம் தரம் கிலோ ரூ.60 முதல் ரூ.70க்கும் விற்பனையானது.
சில்லரை விலைக்கு அதிகபட்சமாக ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தைவிட இந்த வாரத்தில் சின்ன வெங்காயம் விலை சரிய துவங்கியதால், பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் பெரும்பாலான வெங்காயம் தரம் பிரித்து கேரள பகுதிக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. பொங்கல் நிறைவடைந்தவுடன், மார்க்கெட்டுக்கு மேலும் சின்ன வெங்காயம் வரத்து அதிகரிக்கும்போது, அதன் விலை கணிசமாக குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.