CM Stalin on Governor Issue: ஆளுநர் பிரச்னையில் திமுகவினர் இதைதான் செய்ய வேண்டும் – ஸ்டாலின் கூறியது என்ன?

தமிழ்நாட்டில் அரசியல் சூழல் தற்போது பரபரப்பான சூழலை எட்டியுள்ளது. முன்பு திமுக – அதிமுக மோதல் என எப்போதும் இரு பெருந்திராவிட கட்சிகள் மட்டும் என்றுமே தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வரும். ஆனால், தற்போது அந்த களம் திமுக – பாஜக என்றே முற்றிலும் மாறிவிட்டதாகவே தெரிகிறது. அதிமுக தனது உட்கட்சி பிரச்னையில் அதிக கவனம் செலுத்தி வருவதால், பொது நீரோட்டத்தில் இருந்து விலகிவிட்டதாகவே கூறப்படுகிறது. 

அது ஒருபுறம் இருக்க, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்து பாஜக தொடர்ந்து ஆட்சிக்கு எதிராக செயலாற்றி வருகிறது. மத்திய பாஜக அரசு பெரிய அளவில் தொந்தரவு அளிக்காவிட்டாலும், அவர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், திமுகவினருக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வந்தது. சனாதான தர்மம் ஆகியவை குறித்து தமிழ்நாட்டு மேடைகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவதை திமுக அமைச்சர்கள் உள்பட பலரும் பல சந்தர்பங்களில் விமர்சித்துள்ளனர். திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியிலும் ஆளுநர் ஆர்.என். ரவியை விமர்சித்து பல தலையங்கம் வந்துள்ளது. 

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரையில் ஏற்பட்ட அத்தனை நிகழ்வுகளும் திமுக – ஆளுநர் விவகாரத்திந் உச்சக்கட்ட அரங்கேற்றமாக அமைந்துவிட்டது. ஆளுநர் உரையில் சில சொற்களை தவிர்க்க, அதனை அவை குறிப்பில் இடம்பெறாது எனக்கூறி அரசு அச்சிட்டு கொடுத்த ஆங்கில உரையும், சபாநாயகர் வாசித்த தமிழாக்க உரைதான் அவை குறிப்பில் ஏற்றப்படும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

இதற்கிடையே, முதலமைச்சர் தீர்மானத்தை முன்மொழிந்தபோது, ஆளுநர் ஆர்.என். ரவி அவையில் இருந்து வெளியேறினார். இச்சம்பவம் அரசியல் சூழலில் பரபரப்பை உண்டாக்கியது. தொடர்ந்து, இணையத்தில், #GetOutRavi ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டிங்கில் இருந்தது. சென்னையில் பல இடங்களில் ஆளுநருக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்ற போஸ்டரும் இன்று காலையில் ஒட்டப்பட்டிருந்தன.  அதுமட்டுமின்றி, விசிக உள்ளிட்ட எதிர்கட்சிகளும் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகளை எதிர்த்து போராட்டத்தை அறிவித்துள்ளனர். 

மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் வரை ஜன. 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.  இந்நிலையில், சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் ஆளுநரை கண்டித்தோ, தாக்கியோ யாரும் பேச வேண்டாம் என திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் இவ்வாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. 

முன்னதாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த ஆளுநரின் பொங்கல் வாழ்த்தில் மத்திய அரசின் இலட்சிணை இடம்பெற்றுள்ளது, தமிழ்நாடு அரசின் இலட்சிணை இடம்பெறவில்லை. கடந்தாண்டு வெளிவந்த ஆளுநர் ஆர்.என். ரவியின் பொங்கல் வாழ்த்தில் தமிழ்நாட்டின் இலட்சிணை இடம்பெற்றிருந்தது நினைவுக்கூரத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.