வேங்கைவயல் தலித் கொடுமை: இப்படி ஒரு சிக்கல்… உடைத்து பேசும் திருமா!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தலித்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூர செயலை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. குடிநீரில் மனித மலத்தை கலந்து மிகக் கொடூரமான ஒரு விஷயத்தை செய்துள்ளனர். நல்ல வேளையாக பொதுமக்கள் பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி தப்பித்துக் கொண்டனர். இனியும் அந்த குடிநீர் தொட்டியை பயன்படுத்த முடியுமா? எத்தனை முறை சுத்தம் செய்தாலும் அந்த எண்ண ஓட்டத்தை நம் மனதில் இருந்து அகற்ற முடியாது என பல்வேறு தரப்பினரும் கூறினர்.

குடிநீர் தொட்டி – மாற்று ஏற்பாடு

எனவே தான் சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியை இடித்துவிட்டு புதிதாக கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம் நல்ல குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக யாருமே கைது செய்யப்படவில்லை என்பது தான் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. வேங்கைவயல் கிராமத்தில் சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.

யார் அந்த கயவர்கள்?

இந்த மோசமான செயலை செய்த ஆதிக்க சாதி மனப்பான்மை கொண்ட நபர்கள் யார்? என்பது தான் பல்வேறு தரப்பினரின் கேள்வியாக இருக்கிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க கமிட்டி ஒன்று போடப்பட்டுள்ளது. அதன் அறிக்கை விரைவில் வெளியாகும்.

முதல்வர் அளித்த உறுதி

சட்டப்பேரவையில் இதுகுறித்து உரிய விளக்கம் தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதை சுட்டிக் காட்டினார். இதுவரை கைது நடவடிக்கை எடுக்கப்படாதது பற்றி கேள்வி எழுப்புகையில், இந்த விஷயத்தில் எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. அங்குள்ள மக்களும் இதை யார் செய்திருப்பார்கள் என சரியாக சொல்ல முடியவில்லை என்கின்றனர்.

தடயம் எதுவும் சிக்கவில்லை

வேங்கைவயலில் உடனடி நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை. சமீப காலங்களில் சாதி அடிப்படையில் அங்குள்ள மக்களுக்கு இடையில் சண்டை, சச்சரவு ஏதும் நடைபெறவில்லை. கோயிலுக்குள் நுழைய விட மறுப்பது, இரட்டை குவளை முறை பயன்பாடு என்பதெல்லாம் காலங்காலமாக தொடர்ந்து வரக்கூடிய ஒன்று.

நிச்சயம் போராட்டம் நடத்தப்படும்

இதனால் குற்றம் செய்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இருப்பினும் சம்பவம் தொடர்பாக விசாரிக்க அந்த கிராமத்தை சேர்ந்த 20 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முதல்வரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். தற்போது ஆளுநருக்கு எதிராக 13ஆம் தேதி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் வேங்கைவயல் சம்பவத்தை கண்டித்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் 18 அல்லது 19 தேதிகளில் தமிழகம் தழுவிய அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று
திருமாவளவன்
தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.