சென்னையில் உள்ள புறநகர் பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள ஐந்தாவது பிளாட் பாரத்தில் இருந்து தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று அதிகாலை ஐந்து மணி அளவில் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது.
அப்போது, அந்த இடத்தில் வாலிபர் ஒருவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி, கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் இறந்த அந்த நபர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று எந்த தகவலும் தெரியவில்லை. மேலும் அந்த வாலிபர் பேருந்து சக்கரத்தில் எப்படி சிக்கினார்? ஓட்டுனரின் கவனக் குறைவா? என்பது குறித்து அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.